ப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்த நேசமணி கதாபாத்திரம் சமீபத்தில் உலக அரங்கில் டிரெண்ட் ஆனது.
இதைத்தொடர்ந்து வடிவேலு பிஹைண்ட்வுட்ஸுக்குப் பேட்டி அளித்திருந்தார். ப்ரண்ட்ஸ் திரைப்படம் குறித்தும், அதில் நேசமணி கதாபாத்திரம் உருவான விதம் குறித்தும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வடிவேலு நடிப்பில் புதிய படங்கள் வெளிவராததற்கான காரணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த வடிவேலு, இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதன் காரணமாக நடிகர் வடிவேலுவுக்கு, தமிழ்த் திரையுலகில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும் போது, இயக்குநரை ஒருமையில் பேசியது தவறு என்றும் இனியொருமுறை சங்கம் குறித்து தவறாகப் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவர் மீது 16 பக்க அளவுக்கு புகார் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் இயக்குநர் சிம்புதேவனிடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் மூடர் கூடம் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான நவீன் வடிவேலு அளித்த இந்தப் பேட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். #NesamaniInComa மற்றும் #NesamaniStayInComa ஆகிய ஹேஷ்டேக்குகளில் அவர் தனது ட்விட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குநர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார். இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானதுபோல் உடான்ஸ் விடுகிறார்.
நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிர, ஸ்கிரிப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது.
உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்குப் பிறகு நீங்கள் பெரும் பட்ஜெட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்தப் படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்குக் கொடுத்ததற்கு நீங்கள் இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் ஷங்கர் இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்
புலிகேசி இன்டர்வெல் சீன்ல வி.எஸ். ராகவன் ‘திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டயலாக் வந்துச்சுனா படம் பிளாப் என்றீர்கள். என் இயக்குநர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்.
23ஆம் புலிகேசி நான் உதவி இயக்குநராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பைப் பார்த்து வியந்ததைப் போல என் இயக்குநரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நீங்கள் புரூடா விடுவதுபோல் அவர் எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குநர்.
வடிவேலு என்னும் மகா கலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையைப் பொறுத்தும் கொள்வேன். ஆனால், என் இயக்குநர் சிம்புதேவன் சார் மற்றும் நான் பெரிதாக மதிக்கும் இயக்குநர் ஷங்கர் சார் பற்றி மரியாதைக் குறைவாகப் பேசுவதைக் கண்டிப்பாக ஏற்க முடியாது.
புலிகேசி படப்பிடிப்புக்கு முன்பே அதன் பவுண்ட் ஸ்கிரிப்ட் (bound script) படித்துப் புல்லரித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரெக்ஷன் சொன்னால் மரியாதைக்காகச் சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குநர். ஆனால், கதையை மாற்றியதில்லை.
24ஆம் புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் இழப்பே. அதற்குக் காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், சிம்புதேவன் சாரின் அசிஸ்டென்ட்டாகவும் நான் கண்டிப்பேன்” என்று அவர் கூறியிருந்தார்.
நேசமணி இணையத்தில் வைரலானது போன்று ‘கோமாவில் இருக்கிறாரா நேசமணி’ என்ற இயக்குநர் நவீனின் ட்வீட்களும் ட்விட்டரில் கவனம் ஈர்த்துள்ளது.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
�,”