சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா மீதான வழக்கின் விசாரணையை வரும் 28ஆம் தேதி வரை ஒத்தி வைத்து நேற்று (நவம்பர் 14) டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொய்ன் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளரிடமிருந்து (ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க) 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார் ராக்கேஷ் அஸ்தானா. இதனைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணையானது டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. இவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அதனை விசாரித்து வந்த சிபிஐயின் முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். அலோக் வர்மாவின் மீதான விசாரணையும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அஸ்தானா தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று அஸ்தானா மீதான வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நஜ்மி வஜ்ரி முன்பாக நடைபெற்றது. நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 28 ஆம் தேதியை ஒத்தி வைத்தார். அதுவரை அஸ்தானா மீதான வழக்கின் தற்போதைய நிலையே நீடிக்கும், அவர் மீதான வழக்கின் விசாரணையானது 28ஆம் தேதியன்றே தொடங்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், அலோக் வர்மாவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. அந்த நோட்டீஸ் இன்னும் அவருக்கு ஏன் இன்னும் அனுப்பப்படவில்லை என்று கண்டித்த நீதிபதி உடனடியாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
சிபிஐயின் முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவும், இடைத்தரகராகச் செயல்பட்ட மனோஜ் பிரசாத்தும் தங்கள் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தனித்தனியே வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.�,