சிபிஎஸ்இ முடிவைப் பொறுத்து தமிழக அரசின் முடிவு!

Published On:

| By Balaji

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் சிபிஎஸ்இ முடிவைப் பொறுத்து, அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 6ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்மொழி வினாத்தாள்களில் பிழை இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று (ஜூலை 10) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பிழை இருந்த 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கூடுதலாக 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்தத் திருத்தம் செய்யப்பட்ட பிறகு 2 வாரக் காலத்துக்குள் புதிய மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதோடு தற்போது நடைபெற்று வரும் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

உலக மக்கள் தொகை தினம் சார்பாக விழிப்புணர்வு பேரணி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலையில் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் கருணை மதிப்பெண் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்குச் சாதகமாகத் தான் அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் சிபிஎஸ்இ என்ன முடிவு எடுக்கிறதோ அதைப்பொறுத்து, தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். தமிழக மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் நகல் இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை “எனத் தெரிவித்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share