சின்னதம்பி யானை சேதப்படுத்திய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 15 நாட்களாக சின்னதம்பி யானை சுற்றி திரிந்தது. அப்போது கரும்பு தோட்டம், வாழைத் தோட்டம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் யானை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதனால், யானையால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில்,நேற்று (பிப்ரவரி 17) திருப்பூர் மண்டலத்துக்குத் தமிழக அரசால் ரூ.5 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டன. இவற்றில் 7 பேருந்துகளை சென்னையில் தமிழக முதலமைச்சரும், மீதமுள்ள 16 பேருந்துகளை திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ,செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சின்னதம்பி யானையானது, வனத் துறை மூலம் டாப்சிலிப் பகுதியிலுள்ள யானைகள் முகாமுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சின்னதம்பி யானையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.�,