h4>தனியன்
**காலைப் பதிப்பில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி**
அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் தியாகராஜன். தேருக்குப் பேர்போன திருவாரூரில் பிறந்தவருக்கு, ஊரின் மத்தியிலுள்ள பெருங்கோவிலின் மூலவராகக் கொலுவிருக்கும் பழம்பெருமை மிக்க கடவுளின் பெயர் அது. ஆனால் 2011ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது அவர் சின்னக்குத்தூசியாகவே அறியப்பட்டார். தியாகராஜன் என்றால் அவரைப் பலருக்குத் தெரியாது. இந்த இரண்டு நேர் எதிர் பெயர்களுக்கும் இடையில் அவர் வாழ்ந்த 77 ஆண்டுகால தவ வாழ்க்கை வெறும் சுயமரியாதை வாழ்வு மட்டுமல்ல. சுயஜாதி மறுப்புக்கான இலக்கணமாகவும் அமைந்த வாழ்வு அது.
கட்டுப்பெட்டியான ஏழை பிராமணக் குடும்பத்தில் ஓட்டல் தொழிலாளியான தந்தைக்கும் வீட்டு வேலை செய்யும் அம்மாவுக்கும் ஒற்றை மகனாய்ப் பிறந்த அவர், தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சுயமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டது பெரியாரின் சுயமரியாதை இயக்க அரசியல் வாழ்க்கை. பகுத்தறிவுப் பாதை. இறுதிவரை அவர் பெரியாரின் பெருந்தொண்டராகவே வாழ்ந்தார். பெரியாரின் பிறந்தநாளுக்குப் புத்தாடை அணிந்து பெரியார் திடலுக்குச் சென்று அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்து மகிழ்வதோடு கலி பூங்குன்றன் வீட்டில் காலை சிற்றுண்டியை விருந்தாகச் சாப்பிட்டு சந்தோஷப்படும் அளவுக்கு அவர் தீவிர பெரியாரியர். எப்படி நேர்ந்தது இந்த மாற்றம்?
**பெரியாரால் ஈர்க்கப்பட்ட பிராமணர்**
பிராமணக் குடும்பத்தில் பிறந்த தான் பெரியார்பால் எப்படி ஈர்க்கப்பட்டேன் என்பதை அவரே விடுதலை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவரது பேட்டியின் ஒரு பகுதி இது:
“நான் திருவாரூரில் கழக உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே எனக்குப் படிப்பைவிட அரசியலிலேயே அதிக நாட்டமிருந்தது. அப்போது திருவாரூர் அரசியலின் சூத்திரதாரியாகவும் நகர்மன்றத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை வாய்ந்தவராகவும் விவசாயப் பெருங்குடி மக்களிடம் அபரிமிதமான செல்வாக்குப் படைத்தவராகவும் இருந்த சிங்கராயரோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயம் காலப் போக்கில் நெருக்கமானவன் என்று கூறுமளவுக்கு வலுவடைந்தது. பெரும்பாலான நேரங்களை அவருடனேயே கழிப்பேன்; அவரது விவசாய சங்கப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உதவுவேன்.
எனது பிறப்பு காரணமாக, என்னை திராவிடர் கழகத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அது ஒரு மனக் குறையாகவே இருந்தாலும், அன்று திருவாரூர் திராவிடர் கழகத்தின் பெருந்தூண்களாக இருந்து தஞ்சை மாவட்டத்தைப் பெரியாரின் கோட்டையாக மாற்றிட அரும்பாடுபட்ட வி.எஸ்.பி.யாகூப், முத்துக்கிருஷ்ணன், தண்டவாளம் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ரங்கராஜன், பேபி கந்தசாமி, சுரக்குடி வாசுதேவன், சோடாக்கடை ராமையன் போன்ற திராவிட இயக்கத் தீரர்களுடனும் நட்பு ஏற்பட்டது.
நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த பின்னரும் வேலை எதுவும் தேடுவதில் அக்கறை காட்டாமல் சம்பாதித்து வீட்டுக்கு உதவிடும் எண்ணமில்லாமல் பொது வாழ்க்கையில் நாட்டம் மிகக் கொண்டவனாகவே இருந்துவந்தேன்.
ஒருநாள் சிங்கராயருடன் நகர்மன்றத் தலைவராக இருந்த வி. சாம்பசிவம் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். பொதுவான அன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து வழக்கம் போல் அவரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் சிங்கராயரிடம்,
என்ன எப்போது பார்த்தாலும் இவர் உங்களுடனேயே இருக்கிறாரே, வேலைக்குப் போக இவருக்கு விருப்பமில்லையா என்று என்னைப் பற்றிக் கேட்டார்.
சிங்கராயர் சொன்னார்:
பெரியார் அவர்கள் திருச்சியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றினைத் தொடங்கியிருக்கிறார். அந்தப் பள்ளியில் இவரைச் சேர்த்துவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்…
என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே சாம்பசிவம் அவர்கள் குறுக்கிட்டு,
பெரியாருக்கு நான் சிபாரிசுக் கடிதம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, என்னை ஆசிரியர் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி அய்யாவுக்கு ஒரு சிபாரிசுக் கடிதத்தை சிங்கராயர் கேட்காமலே தாமாகவே முன்வந்து எழுதிக் கொடுத்துவிட்டார்.
சிங்கராயர், யாகூப் மூலமாக அய்யாவுக்கு என்னை நன்கு தெரியும். நான் திருச்சி சென்றேன். அப்போது இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. புத்தூர் பெரியார் மாளிகைக்குள் சென்றேன். பெட்டியடி மேசை, கணக்குப் பிள்ளை மேசை என்பார்களே அந்த மாதிரி மேசையின் மேல் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்த பெரியார் எங்கே இந்த நேரத்தில் என்ற கேள்வியுடன் என்னை வரவேற்று உட்காரச் சொன்னார். நான் சிபாரிசுக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன்.
பிரித்துப் படித்த பெரியார் என்னை நிமிர்ந்து பார்த்து,
உங்களை புத்திசாலிப் புள்ளையாண்டான் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன் என்றார். அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று தெரியாமல் திகைத்துப் போனேன்.
அய்யா தொடர்ந்து சொன்னார்.
ஜூன் மாதம் ஆறாம் தேதியோடு அட்மிஷன் முடிந்து, பயிற்சிப் பள்ளியும் திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இப்போது வந்து இடம் கேட்கிறீர்களே! என்றவர் சாப்பிட்டுவிட்டீர்களா என்று கேட்டார். இல்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினேன்.
அடுத்த சில நிமிடங்களில்,
மணியம்மையார் அவர்கள் அதே இடத்தில் தட்டு வைத்து உணவு பரிமாறினார். அப்போது பெரியார் தமது செயலாளர் கொரடாச்சேரி கிருஷ்ணமூர்த்தியை அழைத்து,
நம்ம நெ.து.சு. அய்யா அவர்களுக்கு செக்ஷனுக்கு அய்ந்து இடங்கள் கூடுதலாக அனுமதி வழங்கக் கோரி எழுதுங்கள். கிடைத்தால் இவருக்கே முதல் கார்டை அனுப்பி இவரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றார்.
நான், இரவு 12 மணிக்கு மேல் திருவாரூர் செல்ல ஒரு ரயில் இருக்கிறது அய்யா; நன்றிங்க அய்யா நான் வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டபோது, பெரியார் மாளிகை வளாகத்தின் நிருவாகியாக இருந்த சோமுவை அழைத்து இவரை நம்ம வேனிலேயே கொண்டுபோய் ரயில்வே ஸ்டேஷனில் விட்டுவிடுங்கள் என்றார். பத்து நாள்களுக்குப் பிறகு எனக்கு அட்மிஷன் கார்டு வந்தது.
இப்படித்தான் நான் ஆசிரியரானேன். சிங்கராயர் தூண்டுதலில், சாம்பசிவத்தின் சிபாரிசில் அய்யாவின் பேரன்பினால் நான் ஆசிரியரானேன்.
எனினும் எனக்கு அரசியலிலேயே அதிக நாட்டமிருந்ததால் சில காலம் பள்ளி ஆசிரியராக இருந்தேன். ஆசிரியர் பதவியைத் துறந்துவிட்டுப் பத்திரிகையாளனாக அரசியல் உலகத்துக்கே திரும்பிவிட்டேன் .”
(நன்றி:- “விடுதலை” 1-12-2009)
வெறும் பத்திரிக்கையாளராக அல்ல; கொண்ட கொள்கைக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணிக்கும் ஊடகவியலாளராகச் சின்னக்குத்தூசி வாழ்ந்தார் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. அவர் பல பத்திரிக்கைகளில் முழுநேர ஊழியராகப் பணிபுரிந்திருக்கிறார். பலவற்றில் அரசியல் விமர்சனம், வரலாறு, புத்தக விமர்சனம் எனப் பலபட எழுதியும் இருக்கிறார். அவை அனைத்திலும் அவர் சுயஜாதிக்காக ஒரே ஒரு வார்த்தை அல்லது வரியை எழுதியவரல்ல. மாறாக அதிலிருந்து முற்றுமுழுவதுமாக விட்டு விடுதலையாகி ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் நலனே அவரது ஒரே இலக்காக இருந்தது.
**ஐம்பது ஆண்டு காலத் தவம்**
தாம் பிறக்க நேர்ந்த ஜாதிய சிந்தனையில் இருந்து விடுபடுவது என்பது சினிமாவில் காடடப்படுவதைப்போல ஒருநாள் நிகழ்வோ ஒரு குறிப்பிட்ட செயலோடோ முடிவதல்ல. அது ஒரு வாழ்நாள் கடுந்தவம். அதை அவர் கடைசிவரை கடைபிடித்தார். அதை அவர் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாட்டின் ஊடகத் துறைக்குள்ளும் விரிவுபடுத்தப் போராடினார்.
அவரது இந்த அணுகுமுறையும் வாழ்நாள் போராட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றைத் தமிழ்நாட்டின் சமகால வரலாற்றுப் பின்புலத்தோடு பொருத்திப் பார்ப்பவர்களுக்கு அதன் அருமை புரிபடும். ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக வர்ணிக்கப்படும் அரசியல், அரசு, நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியவற்றில் முதல் மூன்று துறைகளில் இருந்த பிராம்மண / பிராம்மணிய ஆதிக்கத்தை திராவிடர் இயக்கம் கடந்த நூறாண்டுகளில் பெருமளவு இல்லாமல் செய்துவிட்டாலும் ஊடக உலகில் மட்டும் இன்றுவரை பிராம்மண / பிராம்மணிய ஆதிக்கம் பெருமளவு நீடிக்கவே செய்கிறது. வெவ்வேறு வழிகளில்; வடிவங்களில்.
அத்தகைய தமிழக ஊடகத் துறையில் சின்னக்குத்தூசி திராவிடர் இயக்கத் தரப்பு நியாயத்தை ஒற்றைக் குரலாக ஓங்கி ஒலித்தார் என்பது அவரது தனிச்சிறப்பு. அதை அவர் ஒரு நாள், இரண்டு நாட்கள் செய்யவில்லை. வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அல்லது ஓராண்டு, ஈராண்டு செய்து நிறுத்தவில்லை. ஏறக்குறைய ஐம்பதாண்டுக் காலம் அவர் அதைச் செய்தார். அது எவ்வளவு பெரிய சாதனை என்பதும் அதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் எத்தகையன என்பதும் இழக்க நேர்ந்த சலுகைகள் என்ன என்பதும் அவரையும் தமிழ்நாட்டு ஊடக உலக இயங்கியலையும் அறிந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் சின்னக்குத்தூசிக்கு அப்படி இருந்ததில், இயங்கியதில் எந்த வருத்தமும் இருக்கவில்லை. அதை முழு மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் செய்தார். வாழ்நாள் முழுமையும் செய்தார். இதற்கெல்லாம் சிகரமாக அமைந்தது அவரது இரண்டு செயல்கள். தான் பிறக்க நேர்ந்த பிராமண ஜாதியின் மேலாதிக்கத்தை அம்பலப்படுத்துவதில் அவர் மூர்க்கமாக இருந்தார். அவரது புனைபெயர் அதற்கொரு சான்று.
கூர்மையான அரசியல் விமர்சனத்தை எளிமையான தமிழில் நகைச்சுவையோடு எழுதுவது மிகப் பெரிய கலை. தமிழில் அதைச் சாத்தியமாக்கியவர்களில் பலர் திராவிடர் இயக்க எழுத்தாளர்கள். அதில் முதன்மையானவர் குத்தூசி குருசாமி. அவர் பெயரில் இருக்கும் குத்தூசி என்பது சணல் கோணிப்பைக்குள் என்ன பொருள் இருக்கிறது என்பதைக் குத்திப்பார்த்து வெளியில் கொண்டுவரும் கருவி. திராவிடர் இயக்க எதிர்ப்பு அரசியலின் மறைபொருளாக உள்ளிருக்கும் (பிராம்மணிய) ஜாதிய மேலாதிக்க உணர்வை தனது கூர்மையான விமர்சனத்தால் கிழித்து வெளியில் கொண்டுவருவதைக் குறிப்புணர்த்தும் விதமாகவே இந்தக் குத்தூசி என்கிற புனைபெயர் / அடைமொழி குருசாமியோடு சேர்ந்துகொண்டது. அவரது அரசியல் விமர்சன பாணியையே இவரும் கைக்கொண்டதால் இவர் தன் பெயரைச் சின்னக்குத்தூசியாக வரித்துக்கொண்டார்.
அந்தப் பெயருக்கேற்ற வகையிலேயே இவரது அரசியல் விமர்சனங்கள் அமைந்தன. தான் பிறக்க நேர்ந்த ஜாதியிலிருந்து சிந்தனை, செயல் இரண்டிலும் அவர் தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டார். அந்த ஜாதியின் ஆதிக்க உணர்வு அரசியலை அம்பலப்படுத்துவதில் அவர் தயவுதாட்சண்யமின்றி நடந்துகொண்டார்.
பிராமணர்களின் குல குருவாகக் கொண்டாடப்படும் சங்கராச்சாரிகளின் தவறுகளை, அவர்களின் திராவிடர் இயக்க எதிர்ப்பின் பின்னிருக்கும் ஜாதிய வன்மத்தை, இந்துத்துவ அரசியலைத் தமிழ்நாட்டில் திணிக்க அவர்கள் செய்யும் முயற்சிகளை, ஒன்றுவிடாமல் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினார். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருடனான அவரது சந்திப்பு; அதில் இடம்பெற்ற உரையாடல்.
சுய ஜாதியின் மோசமான முகத்தைப் பொதுவெளியில் அம்பலப்படுத்துவதில் சின்னக்குத்தூசி அளவுக்கு இன்னொரு ஊடகவியலாளரோ, அறிவுஜீயோ, எழுத்தாளரோ, அரசியல் செயற்பாட்டாளரோ தமிழ்நாட்டில் இயங்கியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
**ஊடகத் துறையில் ஒற்றை ஜாதி மேலாதிக்கம்**
இப்படி ஒருபக்கம் தமிழக பொதுவெளியில் இன்னமும் நீடிக்கும் பிராம்மணியத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடியவர் தமிழ்நாட்டு ஊடகங்களில் நிலவும் ஒற்றை ஜாதி மேலாதிக்கத்தைக் குறைப்பதிலும் குலைப்பதிலும் முக்கியப் பங்காற்றினார்.
எந்த வித ஜாதியப் பின்பலமோ, ஊடகக் கல்வி கற்ற தகுதியோ இல்லாத கிராமப்புற முதல் தலைமுறை பட்டதாரிகள் பலர் அவரது உதவியால் ஊடகவியலாளர்களாக உருவானார்கள். இன்றுவரை ஒருவரின் குடும்பத் தொடர்புகள், ஜாதிய வலைப்பின்னல்களே ஊடக வேலைவாய்ப்புக்கான கதவுகளைத் திறக்கும் தமிழ்நாட்டு ஊடகத் துறையில் இதுபோன்ற எதுவுமே இல்லாத சாமானியர்கள் பலரை ஊடகவியலாளர்களாக உருவாக்க உதவினார் என்பது எவ்வளவு பெரிய சாதனை? அவரால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படிப் பயன்பெற்றவர்கள் குறைந்தது ஒரு நூறு பேராவது இருப்பார்கள். அவர்களில் பலர் இன்று மிகப் பெரிய ஊடகவியலாளர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் அவரது சொந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. உறவினர்களும் அல்ல. எந்த ரத்த சம்பந்தமும் அற்றவர்கள்.
அரசியலிலும் அவரது அணுகுமுறை அப்படியாகவே இருந்தது. பலரும் நினைப்பதைப்போல அவர் ஆதியில் இருந்தே கருணாநிதி ஆதரவாளரல்ல. இருவரும் ஒரே ஊரானாலும், ஆரம்ப காலங்களில் திக, திமுக என ஒரே அமைப்பில் இருந்தாலும் ஈவெகி சம்பத் திமுகவிலிருந்து பிரிந்தபோது சின்னக்குத்தூசி அவரோடு சென்றார். பின் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபோது அதில் சேர்ந்தார். காமராஜர் மறைவுக்குப் பிறகான காலகட்டத்திலேயே அவர் மீண்டும் கருணாநிதியோடு இணைந்தார். பெரியார், அண்ணா, ஈவெகி சம்பத், காமராஜர், கருணாநிதி ஆகிய அவரது ஆதர்ச அரசியல் ஆளுமைகள் அனைவருமே ஜாதிய அரசியலுக்கு எதிர்க் குறியீடுகள். பெருமளவு பெரியாரின் வார்ப்புகள். அவர்களை ஆதரித்ததன் மூலம் பெரியாரின் இன்னொரு வார்ப்பான சின்னக்குத்தூசி தனது சுயஜாதி மறுப்பை வாழ்நாள் நெறியாக்கிக்கொண்டு வாழ்ந்தார்.
இதில் முக்கியமான இன்னொரு குணம் அவர் எங்கும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவரல்ல. தான் உடனிருந்த அரசியல் தலைமைகள் மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி செய்த காலங்களில் அவர்களுக்குச் சமமாக நாற்காலியில் அமர்ந்து பேச வல்லவராக செல்வாக்கோடு இருந்த சின்னக்குத்தூசி அந்த நெருக்கத்தைத் தனக்காக ஒரு நாளும் உபயோகித்துக்கொண்டவரல்ல.
ஆனால் உதவி தேவைப்படும் மற்றவர்களுக்கு அவர் ஒவ்வொருநாளும் பயன்பட்டிருக்கிறார். ஆனப்பெரிய அரசியல் தலைமைகள் முதல் மிகவும் கொண்டாடப்படும் இலக்கியவாதிகள் வரை அவர் பயன்பட்டவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. பயன்பட்ட விதங்களும் பலதரப்பானவை. எந்தத் தகவலையும் உதவியையும் வரலாற்று நிகழ்வுகளையும் அவரது கம்ப்யூட்டர் மூளை நினைத்த மாத்திரத்தில் சரிபார்க்க உதவும். வறுமையில் வாடிய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வீடுகளில் அடுத்த வேளை அடுப்பெரிய அவசரமாக உதவியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிபாரிசில் வீட்டுச் சமையல் எரிவாயு தொடர்புகள் முதல் அரசாங்க வேலைவாய்ப்புகள் வரை மருத்துவச் செலவுக்கு ஆயிரங்கள் தருவது முதல், பள்ளிக்கூடம், கல்லூரிச் சேர்க்கை முதல் கல்விக் கட்டண உதவி வரை அவர் செய்யாத உதவி என்று ஒன்று இல்லை. ஆனால் எதற்கும் எவரிடமும் எந்தப் பிரதிபலனும் என்றும் அவர் எதிர்பார்த்தவருமல்ல. செய்த உதவிகளை இரண்டாம் நபரிடம் சொன்னவரும் அல்ல.
இத்தனை சிறப்புகள் இருந்தும், இத்தனை செல்வாக்கானவர்களோடு 24-மணிநேரமும் பேசப்பழக முடிந்தவராக இருந்தும் அவர் என்றுமே தன்னை முதன்மைப்படுத்திக்கொண்டவரல்ல. சமூகத்துக்குப் பயன்படுவதே தன் வாழ்நாள் கடன் என்பதை அவர் சொல்லால் அல்ல செயலால் காட்டினார். தன் வாழ்வையே பெரியாருக்கும் திராவிடர் இயக்கத்துக்கும் ஒப்புக்கொடுத்தவராக வாழ்ந்தவராயினும் அவர் எதையும் சொந்தம் கொண்டாடியவரல்ல. அதற்கு கீழ்க்கண்ட கேள்வி பதில் ஒரு சான்று.
கே: நீங்கள் அடிப்படையில் திராவிட இயக்கத்தவரா?
சின்னக்குத்தூசியின் பதில்: நான் அப்படிச் சொல்லிக்கொள்வதில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பெருமைப்பட்டுக் கொள்பவனாகவே வாழ்ந்துவருகிறேன். ஆனால் நான் அடிப்படையில் திராவிட இயக்கத்தவனா, அல்லவா என்பதை நானே சொல்லிக்கொள்வதைவிட என்னோடு பழகியவர்கள், எனது எழுத்தைப் படித்தவர்கள், இனிவரும் காலத்திலும்கூட என்னைப் பற்றியும் எனது எழுத்து பற்றியும் புதிதாகத் தெரிந்துகொள்ளப் போகிறவர்கள் என்னைப் பற்றி என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார்களோ அதுதான் சரியான பதிலாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் நான்! நன்றி: (விடுதலை 1-12-2009).
தன்னல மறுப்பிலேயே ஆகச் சிறந்த தன்னல மறுப்பு என்பது சமூகத்துக்காகவே வாழ்ந்த தன் வாழ்வுக்கான குறைந்தபட்ச அங்கீகாரத்தைக்கூட எதிர்பார்க்காமல் வாழ்வது. பின்வரும் குறள் அவருக்காகவே எழுதப்பட்டது போலும்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என்கிற குறள் மனித உருவம் எடுத்து வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தவர், வாழ்ந்தவர். அவர்தான் சின்னக்குத்தூசி தியாகராஜன்.
[சிறப்புக் கட்டுரை: சுயமரியாதை; சுயசாதி மறுப்பு; சமூகத்துக்காக வாழ்தல்!](https://minnambalam.com/k/2018/06/15/40)�,”