சினி டிஜிட்டல் திண்ணை: ரெட் கார்டில் உருவாகும் ரெக்கார்டு!

public

வாட்ஸப் நீண்ட நேரமாக டைப்பிங் எனக் காட்டியதால், ஃபேஸ்புக் ஆஃப்லைன் போனது. உடனே, மெஸெஞ்சரில் ஃபோன் செய்து ஃபேஸ்புக்கை ஆன்லைன் வரச்சொன்னது ஃபேஸ்புக். ‘என்ன?’ எனக் கேட்பது போல ஒரு கேள்விக்குறியைப் போட்டதும் ‘நீ என்னப்பா, ஒரு நிமிஷம் கூட நிக்காம சங்கத்துக்கு வந்த விஷால் மாதிரி விசுக்கு விசுக்குனு கிளம்பிடுற?’ எனக் கேட்டது வாட்ஸப். தெளிவாகச் சொல்லும்படி ஃபேஸ்புக் கேட்டதும், அதுவரை டைப் செய்ததை அனுப்பியது.

“விஜய் ஆண்டனிக்கு ‘ரெட் கார்டு’ போட்டது தான் இன்னைக்கு கோலிவுட்டின் மிகப்பெரிய சேதி. வருஷத்துக்கு இரண்டு படமாவது ரிலீஸ் செய்யக்கூடிய ஒரு தயாரிப்பாளரை இப்படி செய்துட்டாங்களேன்னு தொழிலாளர்கள் முதல் அனைவரும் கடுப்புல இருக்காங்க. நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸான திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா படங்களுக்குள் திரையில் மட்டும் போட்டியில்லை. சங்கத்திலும் ஒரு உரசல் நிலவியது. தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருக்கும் உதயா நடித்த திரைப்படம் உத்தரவு மகாராஜா. ரஜினியின் 2.0 ரிலீஸுக்கு முந்தைய வாரம் என்பதால் நவம்பர் 16ஆம் தேதியை பல படங்களும் தவிர்த்துவிட்டன. காலியாகக் கிடந்த தேதியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள உத்தரவு மகாராஜா திரைப்படத்தை ரிலீஸ் செய்தார் உதயா. அதுபோலவே விஜய் ஆண்டனியும் திமிரு புடிச்சவன் படத்தை ரிலீஸ் செய்தார். ஆனால், விஜய் ஆண்டனி அதிக வெற்றிகளைப் பெற்று நட்சத்திர நடிகராக இருப்பதாலும், இந்தப்படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாலும் பெரிய படம் என்ற பெயரைப் பெற்றது. அந்தப்பக்கம் உத்தரவு மகாராஜா சிறிய பட்ஜெட் படம். எனவே, ‘சிறு பட்ஜெட் படங்களுக்கு இடம் விடாமல் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் செய்யக் கூடாது’ என்று உதயா தரப்பில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகார் வந்தது சரி; ஆனால், அந்தப் புகாரை விசாரிக்க யாராவது இருக்க வேண்டும் அல்லவா. விஷால் உட்பட எந்த தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் அந்த அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லையாம். இதனால் தான் சங்கப் பொறுப்பிலிருக்கும் ஒருவரின் புகாரையே விசாரித்து நீதி வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. மொத்தமாக திரையுலகை பாதிக்கும் இந்தப் பிரச்சினையை, தனக்கு எதிராக மட்டுமே நடைபெற்றதென நினைத்து உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தங்களது தயாரிப்பாளர்கள் சங்கப் பதவிகளை ராஜினாமா செய்தனர். இது நேரடியாக விஷாலின் காதுகளுக்கே சென்றதும் நிலைமை கைமீறிச் சென்றதை உணர்ந்தவர். உடனே, விஜய் ஆண்டனிக்கு ரெட் கார்டு போட்டுவிட்டாராம்” என்று வாட்ஸப் முடித்ததும், அதை ஷேர் செய்த ஃபேஸ்புக் 10 நிமிடம் காத்திருக்கச் சொல்லி ஆஃப்லைன் போனது. ஃபேஸ்புக் வரும் வரை மற்ற மெஸேஜ்களைப் படித்துக்கொண்டிருந்த வாட்ஸப்புக்கு, ‘தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்காவயல் கிராமத்தை கஜா புயலின் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க, நடிகர் விஷால் தத்தெடுத்திருக்கிறார்’ என்ற தகவலை அவரது மக்கள் தொடர்பாளர் தரப்பிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அதை ஷேர் செய்து முடித்ததும் ஃபேஸ்புக் ஆன்லைன் வந்து ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியது.

“விஷாலுடைய இந்த நடவடிக்கைக்காக பலர் காத்திருந்ததாகத் தெரிகிறது. விஜய் ஆண்டனியை ஃபோனில் பிடிக்கவே முடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறார். அவரே எதிர்பார்க்காத இடத்திலிருந்தெல்லாம் ஆதரவு கிடைப்பதாக ‘சார் இப்ப கொஞ்சம் பிசியா இருக்காங்க’ என்று கூறிய குரல் விளக்குகிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு விஜய் ஆண்டனி கட்டுப்படவில்லை என்ற புகாரைச் சொல்லித்தான் ரெட் கார்டு போட்டிருக்கிறார்கள். ‘தலைவன் சரியா இருந்தால்தானே, உறுப்பினர்கள் சரியா இருப்பாங்க’ எனக் கேட்கக் காத்திருந்த குரல்கள் வெளியே வந்திருக்கின்றன. பெரிய படம், சிறிய படம் என்பதில் மட்டும் கவனம் செலுத்தும் விஷால் அதிக விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது, பெரும்பான்மை திரையரங்குகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற சட்ட திட்டங்களையெல்லாம் எப்போது நடைமுறைப்படுத்துவார் என்ற துண்டுச்சீட்டு விஜய் ஆண்டனி தரப்பிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘விஷாலின் கடைசி இரு படங்களான இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகியவற்றுக்கே இந்த சட்ட திட்டங்கள் இல்லையே. பிறகு ஏன் மற்றவர்களை மட்டும் இப்படி அழிக்கவேண்டும்’ என்ற மெஸேஜ் வந்திருக்கிறது. ‘சங்கத் தலைவரா சினிமாவைக் காப்பாத்த நினைக்கிறார்னா, இதோ ரஜினி படம் வருதே, அதிக விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லித்தான் பார்க்கட்டுமே’ என்ற கருத்து, காலை வணக்கம் தகவலுக்கு பின் குறிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. விஷாலுக்கு எதிராக சென்ற தேர்தலில் களமிறங்கிய அணியினரின் எதிர்வினைதான் இவையென நினைக்கவேண்டாம் என்கின்றனர் திரையுலகினர். தயாரிப்பாளர்கள் சங்க கஜானாவை காலி செய்தது, செலவு செய்த பணத்துக்கான வேலைகள் நடக்கிறதா எனக் கண்காணிக்காமல் போனது என பெரும்பாலான சங்க உறுப்பினர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம். விஷாலாவது பரவாயில்லை, காருக்கு பெட்ரோல் போடச் செல்லவேண்டும் என்றால் சங்கத்துக்கு வந்து பார்த்துவிட்டு கார் வந்ததும் ஏறிச் செல்கிறார். ஆனால், கௌதம் மேனன் போன்றவர்கள் பதவியிலிருப்பதையே மறந்துவிட்டார்களோ என சந்தேகிக்கும் அளவுக்கு இருக்கிறது எனப் புலம்புகின்றனர். எனவே, விஜய் ஆண்டனிக்கு கொடுத்த ‘ரெட் கார்டு’ விஷாலுக்கு எதிராகக் களமாட வலிமையான காரணமாக அமைந்திருக்கிறது” என ஃபேஸ்புக் அனுப்பிய மெஸேஜை வாட்ஸப்பில் ஷேர் செய்துவிட்டு வருவதற்குள், மீண்டும் ஆஃப்லைன் போனது ஃபேஸ்புக். அந்த ரஜினி படம் பற்றிய தகவலை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டுமே என்ற பரிதவிப்பில் வாட்ஸப்பும் ஆஃப்லைன் போனது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *