சினி டிஜிட்டல் திண்ணை: பொன்னியின் செல்வன் மீண்டும் எழுகிறான்!

Published On:

| By Balaji

வாட்ஸ் அப் ஆன்லைன் வருவதற்கு முன்பே ஃபேஸ்புக் தனது மெஸேஜை அனுப்பிவிட்டு, ‘தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கான கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்கிறேன்’ என்ற குறிப்பையும் விட்டுச் சென்றிருந்தது. டைட்டிலே சுவாரஸ்யத்தை வரவழைத்ததால் வாட்ஸ் அப், சற்றும் தாமதிக்காமல் படிக்கத் தொடங்கியது.

தமிழ்நாட்ல இருக்க ஒவ்வொருத்தருக்குள்ளேயும் இருக்கும் பெருங்கனவு, பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமா எப்ப பார்க்கப்போகிறோம் என்கிறதுதான். ஏன், பல இயக்குநர்களுக்கே அந்தக் கனவு இருக்கு. எம்ஜிஆர் அந்த காலத்துலயே பத்தாயிரம் ரூபாய்க்கு பொன்னியின் செல்வன் உரிமையை வாங்கி, படம் எடுக்க முயற்சி செய்திருக்கார்னா சும்மாவா. தமிழ் சினிமாவும், அதன் ரசிகர்களும் தலைமேல தூக்கி வெச்சு அந்தப் படத்தைக் கொண்டாடுவாங்க என்கிறதுல சந்தேகமே இல்லை. ஆனால், தலையில் தூக்கிவைக்க, முதல்ல அதைத் தோளில் சுமக்கணுமே! அது யாரு? அப்படின்ற கேள்விக்குத்தான் பதிலே கிடைக்கலை. எம்ஜிஆர், வைஜெயந்தி மாலா, பாலையா, நம்பியார் மாதிரியான தமிழ் சினிமாவின் பெரும் ஜாம்பவான்களை அந்தப் படத்துல பார்க்க நல்லாத்தான் இருந்திருக்கும். ஆனால், நடக்கலயே. எம்ஜிஆருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து, அந்தப் படத்தையே முடக்கிப்போட்டிருச்சு. ஆனால், மணிரத்னம் சில வருஷங்களுக்கு முன்ன எடுக்குறதா திட்டமிடப்பட்டது. அப்பவே பல நூறு கோடிகள் தேவைப்பட்டதால, அவரும் ஓரங்கட்டிட்டு வேற படத்துக்குப் போயிட்டாரு. ஆனால், இப்ப காலம் கூடிடுச்சு. சோழர்களை அழிக்க பாண்டியர்கள் காத்திருந்ததுபோல, இத்தனை நாளும் தமிழ் சினிமா காத்திருந்த காலம் முடிஞ்சு, படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டதா செய்தி வந்தது. என்ன விஷயம்னு விசாரிச்சப்ப நல்ல தகவலாகவே கிடைச்சது.

மணிரத்னம், ஜெயமோகன் உருவாக்கிய ஸ்கிரிப்ட் இன்னும் அப்படியேதான் இருக்கு. படத்தை உருவாக்க முதல் தடையா இருந்த பட்ஜெட் என்கிறதைப் பத்தி கவலையேபடாமல், நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கத் தேவையான பேச்சுவார்த்தைகள் தொடங்கிடுச்சாம். மொத்த நடிகர்கள், டெக்னீஷியன், ஷூட்டிங்குக்கான தோராய மதிப்பு இதையெல்லாம் சேர்த்து எப்படியும் 500 கோடி ரூபாய்க்கும் மேல பட்ஜெட் போகும்னு தெரிஞ்சதும் கால்ஷீட், சம்பளத்தை ஃபைனல் பண்ணிட்டு எவ்வளவு பட்ஜெட் வருதுன்னு பார்க்கலாம் என்று தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு கம்பெனிகள் சொல்லியிருக்கு. ராவணன் படத்தின்போதே ‘நீங்க அந்தப் படத்தை எடுக்கும்போது கண்டிப்பா நான் அதில் நடிப்பேன்’ என உறுதி கொடுத்த விக்ரம், செக்கச் சிவந்த வானம் ஷூட்டிங்கின்போது ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் பற்றி ரொம்ப ஆர்வமா பேசிய விஜய் சேதுபதி, ஓகே கண்மணி படத்துல நடிச்ச துல்கர் சல்மான், ஜெயம் ரவி போன்ற நடிகர்கள்கிட்ட பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. சிம்புவுக்குத் தயார் செய்து வெச்சிருந்த கேரக்டர்லதான் துல்கர் சல்மானைக் கொண்டுவந்திருக்கிறாராம் மணிரத்னம்.

படத்தினுடைய பட்ஜெட்தான் பெரும் பிரச்சினைன்னு நினைச்சவங்களுக்கு கால்ஷீட்டும் சம்பளமும் தலைவலியைக் கொடுத்துக்கிட்டு இருக்கு. மினிமம் நான்கு மாசம், மேக்ஸிமம் ஆறு மாசம் ஒவ்வொரு நடிகரும் கால்ஷீட் கொடுக்கணும் என்பது கணக்கு. ஆனால், அந்த நான்கு மாச கால்ஷீட்டும் தொடர்ச்சியா இருந்தால் பிரச்சினை இல்லை எனத் தெளிவாகவும் சொல்கிறார்களாம். விஜய் சேதுபதி சமீபத்துலதான், சீனு ராமசாமியுடன் சேர்ந்து முப்பது நாட்களுக்குள்ள ஒரு படத்தை முடித்தார். அதன்படி பார்த்தா, விஜய் சேதுபதியுடைய நான்கு படத்துக்கான கால்ஷீட்டை மணிரத்னத்துக்குக் கொடுக்கணும். ஆனால், நான்கு படத்தின் கால்ஷீட்டில் ஒரு படத்துக்கான சம்பளம்தான் கொடுக்கப்படும் என்பதாலயும் ஒரே குழப்பமான நிலை ஓடிக்கிட்டு இருக்கு.

பட்ஜெட் குழுவைப் பொறுத்தவரைக்கும், பெரிய புராஜெக்ட் என்கிறதால நிறைய சம்பளம் கொடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகர்களுக்கும் 10 கோடி ரூபாய் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கு. ஆனால், அதையும் வாங்கிக்கொள்ளத் தயங்குகிறார்களாம். காரணம், இந்தப் படத்துக்கு பத்து கோடி வாங்கிவிட்டால், அடுத்த படத்துக்குக் குறைத்து வாங்க முடியாது. நான்கு கோடியில் படம் நடிக்கும் நடிகர், இதில் நடித்து சம்பளத்தை உயர்த்திவிடக் கூடாது என நினைத்து, பிறகு பாகுபலி நிலைக்குச் செல்ல வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறார்களாம் சிலரின் நலன் விரும்பிகள்.

பயிற்சி, ஒத்திகை, ஷூட்டிங் என மணிரத்னத்திடம் திட்டங்கள் கச்சிதமாக இருந்தாலும் பெரும் நடிகர்கள் பட்டாளத்தை ஒரு ரிமோட்டில் இயக்கவேண்டிய சிரமமும் இருக்குறதாலதான் இவ்வளவு யோசிக்கிறாங்களாம். செக்கச் சிவந்த வானம் படத்துல, பல நடிகர்களை ஒண்ணா சேர்த்து படம் பண்றதுல கைதேர்ந்தவர்னு தன்னை நிரூபிச்சிட்டார் மணிரத்னம். அதைத்தாண்டி திரைக்கதையைப் படமா எப்படி உருவாக்குறதுன்னும் அவருக்கும் தெரியும். ஆனாலும், இப்பவும்கூட இந்தப் படத்தை உருவாக்க முடியுமான்னு ஒரு சந்தேகம் இருந்துகிட்டே தான் இருக்கு” என்று முடிந்த ஃபேஸ்புக்கின் மெஸேஜைப் படித்ததும், ஷேர் செய்யாமலேயே புத்தக அலமாரியில் இருந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்தது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share