டேட்டாவை ஆன் செய்ததும் வந்து விழுந்த எல்லா அரசியல் செய்திகளையும் ஓரம்கட்டிவிட்டு நேராக சினிமா மேட்டருக்குள் வந்தது ஃபேஸ்புக். மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் போற்றப்படும் விஜய் சேதுபதி குறித்த சங்கதிதான் அது.
“விஜய் சேதுபதி சில நாட்களாகவே அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் பார்த்தவர்களுக்குப் பேரதிர்ச்சி. ஒருவரைத் தாக்கிப் பேசத் தெரியாத விஜய் சேதுபதி ஏன் அப்படி நடந்துகொண்டார் என்று அவர்களிடமே விசாரித்தபோது, சினிமாவுக்குள் வருவதற்கு முன்பிருந்தே அவரைப் பார்த்துக்கொண்டு வரும் அந்த நண்பர், எல்லாவற்றுக்கும் காரணம் அந்த 96 படப்பிரச்சினைதான் என்றார். விளக்கமாகக் கேட்டபோது பேசினார். ‘விஜய் சேதுபதியைப் பொறுத்தவரையில் 96 திரைப்படத்தினால் ஏற்பட்ட காயம் இன்னும் அடங்கவில்லை. தன்னைப் பயன்படுத்தி, தனது வளர்ச்சியில் மற்றவர்கள் குளிர்காய்கிறார்களோ எனும் எண்ணம் அதிகமானதே, நானே சதுரங்கக் காயாக நின்றேன் என்று அவர் சொல்லக் காரணமானது. அதனால்தான் ஒரு கேள்வியால் அவரை கார்னர் செய்ய முயன்றபோது, அவரை அறிவாளியாகக் காட்டிக்கொண்டு தன்னை முட்டாளாக்கப் பார்க்கிறாரோ என கொந்தளித்துவிட்டார் என்கிறார் அந்த நபர். விஜய் சேதுபதி ஓடும் குதிரை என்பதால் அவர் மீது பந்தயம் கட்ட எல்லோரும் தயார். ஆனால், அது பந்தயக் காசாக இல்லாமல், குதிரையைப் பராமரிக்க வாங்கும் கடனாக மாறுவதால், கிட்டத்தட்ட விஜய் சேதுபதி மீதே உரிமை கொண்டாடும் நிலைக்கு அவரை ஆளாக்கிவிடுகிறது. ‘விஜய் சேதுபதியின் கால்ஷீட் இருக்கிறது என்ற உத்தரவாதத்தில் வாங்கப்படும் கடனை, விஜய் சேதுபதி படத்தை நிறுத்தித்தான் வாங்க வேண்டியதிருக்கிறது. படம் ஹிட் அடிக்கும். வந்து தர்றோம் என்று ஃபைனான்சியருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை, ஹீரோவிடம் கொடுத்து எங்கள் பணத்தை திருப்பிவிட்டு படம் ஓடியதும் ஹீரோவிடம் கொடுக்கலாமே’ என ஆதங்கப்படுகிறார் ஃபைனான்சியர் ஒருவர். இரு தரப்பும் அவரவர் பக்கத்து நியாயத்தைப் பேசும்போது, இரண்டுமே சரியாகத் தோன்றுவதால்தான் ‘இது நம்ம இரண்டு பேர் பேசுவதால் மாறக்கூடியது அல்ல’ என்று விஜய் சேதுபதி எப்போதும் கூறுகிறார் என்கிறார் அந்த நண்பர். ஜல்லிக்கட்டு மேட்டரில்கூட இளைஞர்கள் போராடுவதையும், போலீஸ் அடிப்பதையும் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தை முன்வந்து பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லி வேண்டுகோள் வைத்தவர் விஜய் சேதுபதி எனக் குறிப்பிடுகிறார் அவர்” என்ற ஃபேஸ்புக்கின் மெசேஜை ஷேர் செய்துவிட்டு டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“அஜித்தான் தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்டிங். இரண்டு பாட்டு ரிலீஸ் செய்தது மட்டுமில்லாம, இன்னிக்கு முழு ஆல்பமும் ரிலீஸ் பண்றாங்களாம். இரண்டு பாட்டும் அவ்வளவா ரசிக்காம போனாலும், முழு ஆல்பம் மேல நம்பிக்கை இருக்காம் படக்குழுவுக்கு. ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாம அஜித் அடுத்த படத்தின் வேலையைத் தொடங்கிட்டார். பிங்க் ரீமேக்ல அஜித் நடிக்கிறதும், அதைத் தொடர்ந்து போனி கபூருக்கு ஒரு படம் பண்றதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்த இரண்டாவது படத்தின் இயக்குநர் யாருங்குறதும் இப்ப தெரிஞ்சிருக்கு. அஜித் எப்படி சிவா கூட தொடர்ந்து மூன்று படங்கள் நடிச்சாரோ, அதே மாதிரி தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குநர் எச்.வினோத் கூடவும் இரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். முதலில் வினோத் சொன்ன கதையைத்தான் ஓகே செய்திருக்கார் அஜித். ஆனால், ஸ்ரீதேவிக்குக் கொடுத்த வாக்குறுதி பெண்டிங்ல இருக்குறதால, பிங்க் ரீமேக் ஆசையைச் சொல்லி, இதை டைரக்ட் பண்ணிடுங்க. அடுத்த படம் நம்ம ஸ்டோரியை பண்ணலாம் என அஜித் வைத்த கோரிக்கையை ஏற்று வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். வினோத்துக்கும் இது ஒரு சவாலாகவே இருக்கும். இரண்டு படங்களை குதிரை வேகத் திரைக்கதையால் அதகளப்படுத்தியவருக்கு, பல திருப்பங்களை நான்கு சுவருக்குள் நிகழ்த்தும் நீதிமன்றத்துக்குள் நடக்கும் கதை சவால் நிறைந்ததாகவே இருக்கும்” என்ற வாட்ஸ் அப்பின் தகவலை ஷேர் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,