சினிமா டிஜிட்டல் திண்ணை: விஜய் கிங் இல்லை; கிங் மேக்கர்!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டாவை ஆன் செய்து மெஸேஜ் அனுப்பியது வாட்ஸ் அப். “சர்கார் திரைப்படத்துக்கு நல்ல ஓப்பனிங்கை அமைத்துக் கொடுத்த விஜய் மீது ரசிகர்கள் படு குஷியாக இருக்கிறார்கள். இவ்வளவு நம்பிக்கையுடன் பேசும் அளவுக்குப் படத்தில் சரக்கு இருக்கிறதா என்ற கேள்வி அடுத்ததாக உருவாகியிருக்கிறது. இதைப்பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்களும் நம்பிக்கை தருவதாகவே அமைந்திருக்கின்றன.

கதைப்படி விஜய் அரசியல்வாதி அல்ல. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்துபவர். அந்த கார்ப்பரேட் நிறுவனம்தான் அரசியல்வாதிகளையே வெற்றிபெற வைக்கிறது. இப்படித்தான் விஜய், அரசியலுடன் கைகோக்கிறார் என்றது சர்கார் தரப்பு. புரியவில்லையா என்று கேட்டு விளக்கம் கொடுத்தது. உலக அளவில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றியும், இந்திய அளவில் 2014 நாடாளுமன்றத் தேர்தலும்தான் சர்கார் கதையின் ஆணிவேர்.

ட்ரம்ப், மோடி ஆகிய இருவரும் தனியார் விளம்பர நிறுவனத்தின் மூலமாக அனைத்துத் தளங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டனர். இவர்தான் எதிர்காலம் என்று அனைத்து மக்களும் முடிவெடுத்துவிட்டதாக ஓர் உணர்வை அந்த விளம்பரங்கள் ஏற்படுத்தியதன் தாக்கம்; தேர்தல் வெற்றி. அப்படியொரு விளம்பர நிறுவனத்தின் பொறுப்பாளராகவே விஜய் இந்தப் படத்தில் வருகிறாராம். இந்தி சினிமாவிலும் கால் பதித்துவிட்ட முருகதாஸ், சர்கார் கதையை ஒரு இந்தியத் திரைப்படமாக எடுக்கவே திட்டமிட்டிருக்கிறார். ஆனால், கதைக்களம் தமிழக மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று விஜய் விரும்பியதால், தமிழக அரசியல்வாதி ஒருவரை புரமோட் செய்ய விஜய் அமெரிக்காவிலிருந்து வேலை செய்வதாக கதை மாற்றப்பட்டிருக்கிறது. டார்கெட் மாநில அரசாக இருந்தாலும், அது சித்திரிக்கப்பட்டிருப்பதெல்லாம் மத்திய அரசின் செயல்பாடுகளைப் பற்றியது தான். இரு அரசியல்வாதிகளுக்கிடையேயான போட்டியில் விஜய் என்ன செய்கிறார் என்று சொல்லாமல், இதுவரை அரசியல்வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை விஜய் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள். உடல் உழைப்பைவிட, அறிவின் உழைப்பு அதிகமாகப் பயன்படுத்தும் கேரக்டரில் நடிப்பதாலேயே விஜய் கொஞ்சம் முதிர்ந்த கேரக்டரில் வலம் வருகிறாராம்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்தியா தயாராகிவரும் நிலையில், சர்கார் படம் இந்தக் கதையைப் பேசுவது சரியாக வொர்க்-அவுட் ஆகும் என முடிவெடுத்தே படத்தை வடிவமைத்திருக்கிறார்கள். படத்தின் அவுட்புட்டில் சர்கார் டீம் செம ஹேப்பியாம்” என்று வாட்ஸ் அப் சொல்லி முடித்ததும், ஃபேஸ்புக் ஒரு தகவலை போஸ்ட் செய்தது.

“விஜய் சேதுபதிக்கு 96 படம் மூலமாக ஏற்பட்ட பிரச்சினைக்குக் கவலைப்படாத தமிழ் சினிமாவை, எல்லா துன்பத்தையும் அடக்கிக்கிட்டு ‘யாரை குத்தம் சொல்லி நமக்கு என்ன கிடைக்கப்போகுது சொல்லுங்க’ என பிரஸ் மீட்டில் பேசியபோது கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்காம். விஷால் இதுல தேவையில்லாம இழுக்கப்படுறதா ஒருபக்கம் பேசப்பட்டாலும், அவர்தான் குரல் கொடுக்கத் தயாரா இருக்காறேன்னு பேசினாலும், அவர் 96 படப் பிரச்சினைல ரியாக்ட் செய்யாமல்விட்டது தப்புன்னு குரல்கள் வெளிவர ஆரம்பிச்சிருக்கு. தயாரிப்பாளர் சங்கத் தலைவரா நந்தகோபாலுக்குப் பிரச்சினை வந்தப்ப பேசியிருக்கலாம். நடிகர் சங்கம் சார்புல விஜய் சேதுபதியை கார்னர் பண்ணப்ப பேசியிருக்கலாம். அப்படியும் இல்லைன்னா, அவருடைய கத்தி சண்டை படத்தை தயாரிச்சதால நந்தகோபாலுக்கு ஏற்பட்ட கடனும் சேர்ந்துதான் இந்தப் படத்துக்கு பிரச்சினைங்குறதால, அந்த வழில உதவியிருக்கலாம். ஆனால், இப்படி மிக முக்கியமான சமயங்கள்ல தூங்குற மாதிரி நடிச்சதுதான் மிகப்பெரிய விவாதப்பொருளா மாறியிருக்கு. ‘நான் செஸ் விளையாடியிருக்கேன். ஆனா, செஸ் காயினா நான் நின்னது அப்பதான்’ அப்படின்னு விஜய் சேதுபதி பேசனதுக்குப் பின்னால நாலரை கோடி ரூபாய் கடன் இருக்கு. நந்தகோபால் தர வேண்டிய நாலரை கோடி கடனை நான் தர்றேன்னு விஜய் சேதுபதி பொறுப்பேத்துக்கிட்டதுக்கு அப்புறம்தான் பட ரிலீஸுக்கு வழி உண்டாகியிருக்கு. விஜய் சேதுபதி சம்பளமாவே 4 கோடி தான் வாங்கியிருப்பார். ஆனால், நாலரை கோடி கடன் ஒருபக்கம், அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்க பணம் கொடுக்க வேண்டிய பைனான்சியர் ஒருபக்கம், சங்கங்கள் ஒருபக்கம்னு நின்னுக்கிட்டு தனக்கு வழிவிடாம கையெழுத்து போட வெச்சதைத் தான் விஜய் சேதுபதி அவ்வளவு எமோஷனலா சொல்லியிருக்கார்” என்ற போஸ்ட்டை எல்லா ஃபேஸ்புக் குரூப்பிலும் ஷேர் செய்துவிட்டு லாக்-அவுட் ஆனது ஃபேஸ்புக்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share