தமிழ் சினிமாவில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் முதல் சுற்றில் தோல்வியடைந்தாலும் ஷிப்டிங் ரிலீஸின் போது வெற்றி பெற்ற படங்கள் உண்டு.
பிரமிட் நடராஜன் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான சங்கமம் திரைப்படம் ரிலீஸ் சென்டரில் வசூல் ரீதியாக பலவீனமாக இருந்தது. தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்த போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முழுப் படமும் ஒளிபரப்பானது. இதனால் படம் வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். குறைந்தபட்ச வசூலும் இனி இருக்காது என தயாரிப்பாளரிடம் கொடுத்த பணத்தை திரும்பிக் கேட்க தொடங்கிய வேளையில் சங்கமம் திரையிட்ட திரையரங்குகளில் வசூல் அதிகரிக்க தொடங்கியது.
ரிலீஸ் சென்டரில் இருந்து ஷிப்டிங் முறையில் B, C சென்டர்களில் சங்கமம் திரையிட்ட தியேட்டர்களில் கல்லா கட்டி படம் வெற்றி பெற்றது. இதே போன்று மிஷ்கின் இயக்குனராக, நரேன் நாயகனாக, அறிமுகமான படம் சித்திரம் பேசுதடி. இப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட போது போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
போதிய வசூல் இல்லாததால் முதல் மூன்று நாட்களில் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது. இப்படத்தில் கானா உலகநாதன் பாடிய வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற கானா பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியிருந்தது.
படம் பார்க்க விரும்பிய ரசிகனுக்கு தியேட்டரில் படம் இல்லை. இந்த நிலையில் அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் கவனத்திற்கு தயாரிப்பாளரால் இத்தகவல் கொண்டு செல்லப் பட்டது. படத்தை முழுமையாக பார்த்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் தனது நிறுவனம் சார்பாக தமிழகம் முழுமையும் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து மீண்டும் சித்திரம் பேசுதடி படத்தை ரிலீஸ் செய்தார். பாக்ஸ் ஆபீஸ் வசூலில் படம் ஹிட். இது போன்ற சம்பவங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வமாக நடைபெற்றது உண்டு.
இதே போன்றதொரு முயற்சியை பிப்ரவரி 22 அன்று வெளியான திருமணம் திரைப்பட தயாரிப்பாளர் தற்போது மேற்கொண்டுள்ளார். படம் வெளியான அன்று போதுமான தியேட்டர்கள் இப்படத்திற்கு கிடைக்கவில்லை. படம் நன்றாக இருக்கிறது என வெகுஜன மக்களிடம் விவாதப் பொருளாக மாறுகிற போது திரையரங்குகளில் இருந்து படம் தூக்கப்பட்டுவிட்டது. தற்போது படத்தில் ரசிகனை நெளிய செய்த தேவையற்ற காட்சிகளை நீக்கி விட்டு ஏப்ரல் மாதம் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சித்திரம் பேசுதடி சாதனையை திருமணம் சமன் செய்யுமா, முறியடிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.�,”