{சிதம்பரம் வழக்கு: நீதிபதிகள் செய்தது நியாயமா?

Published On:

| By Balaji

b>முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.வி. ஆச்சாரியா சிறப்புப் பேட்டி-2,

-எஸ்.ராஜேந்திரன் – தமிழாக்கம்: பா.சிவராமன்

**சமீப வழக்கு ஒன்றில் முன்ஜாமீனுக்கான கோரிக்கை மீது நீதிமன்றம் முடிவு வழங்குவது பல மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டது. அத்தகைய மனுக்களை முடிவு செய்வதற்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்க வேண்டியது அவசியமில்லையா? (ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு ஏழு மாதங்கள் தாமதப்படுத்தப்பட்டது என்பது இங்கே கவனிக்கத் தக்கது)**

முன்ஜாமீனுக்கான சட்டப்பிரிவு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 438 இல் அடங்கியுள்ளது. போலீஸ் அல்லது புலனாய்வுக் கழகத்தால் சட்டத்திற்குப் புறம்பாக கைதுசெய்யப்படுவோம் என அஞ்சும் குடிமக்கள் எவரும் நீதிமன்றம் ஒன்றை அணுகி எதிர்பார்ப்பு ஜாமீன் என்று அறியப்படும் முன்ஜாமீனைப் பெறுவதற்கு இந்த சட்டப்பிரிவு வழிவகுக்கிறது. குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இந்த பிரிவு 438 ஐ 1973 இல் சேர்ப்பதற்கு முன்பு அப்படிப்பட்ட சட்டப்பிரிவு எதுவும் இருக்கவில்லை. ஒரு நபரை எந்த ஒரு அதிகார மையம் கைது செய்தாலும் தான் விதிக்கும் நிபந்தனைகளுக்கேற்ப அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கும்படி கட்டளை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு இந்த சட்டப்பிரிவு அதிகாரமளிக்கிறது.

போதிய முகாந்திரமின்றி ஒரு குடிமகன் அல்லது குடிமகள் காவலில் வைக்கப்படக்கூடாது என்பதையும் அவரது தனிநபர் சுதந்திரம் போலீஸ் அல்லது இதர அதிகார அமைப்புகளின் சட்டத்திற்குப் புறம்பான அல்லது இதர நடவடிக்கைகளால் முடக்கப்படக்கூடாது என்பதையும் உத்திரவாதம் செய்யவே இந்த அதிகாரம். நீதிமன்றம் முன்னுரிமை கொடுத்து அத்தகைய மனுக்கள் மீது முடிவெடுக்கவேண்டியதன் அவசியத்தை மிகைப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

குர்பக்ஷ் சிங் சிப்பாவுக்கும் பஞ்சாப் மாநிலத்திற்குமிடையிலான பிரசித்தி பெற்ற வழக்கில் (AIR 1980, 2 SCC 565) உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சட்ட அமர்வு இந்த சட்டப் பிரிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு மட்டுமின்றி பல்வேறு வழிகாட்டுதல்களையும் கூட முன்வைத்தது. அந்த அமர்வு முடிவு தெரிவித்த முக்கியமான அம்சம் ஒன்று என்னவென்றால் நீதிமன்றம் அத்தகைய மனு ஒன்று சீரியஸ் தன்மையற்றதாகவும் பொறுப்பற்றதாகவும் இல்லாமல் இருப்பதாக காணும் பட்சத்தில் மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமலேயேகூட உத்தரவு பிறப்பிப்பதற்கும் பின்னர் அரசு வழக்கறிஞருக்கு நோட்டீஸ் பிறப்பிப்பதற்கும் நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது என்பதாகும். இதன் பின்னர் நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து இறுதி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் கூட அது சுட்டிக்காட்டியது.

துரதிருஷ்டவசமாக, உச்சநீதிமன்றம் பரிசீலித்த இந்த வழிமுறை பல நீதிமன்றங்களால் பின்பற்றப்படுவதில்லை. இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க அவை தயங்குகின்றன. இதன் விளைவு என்னவென்றால் முன்ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக வேண்டியுள்ளது. ஏனெனில் இதற்கிடையே அவர் கைது செய்யப்பட்டால் அவரது மனுவே பொருளற்றதாகிவிடுகிறது. எனவே முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனு எவ்வளவு விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்படவேண்டுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து முடிவெடுக்கப்பட வேண்டும்.

இருப்பினும் காலக்கெடு எதையும் நிர்ணயிப்பது நடைமுறை சாத்தியமானது அல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படவேண்டும் என சட்டப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பான வகை வழக்குகள் பல உள்ளன. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஒரு வழக்கு முடிவு செய்யப்படுவது அரிது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஒருவரின் வெற்றியை கேள்விக்குள்ளாக்கும் தேர்தல் மனுக்கள் மீது ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மனு மீது துரிதமாக முடிவு வழங்குவதற்கான தேவை குறித்து, குறிப்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நிலையில் அத்தகைய தேவையை கணக்கிலெடுப்பது நீதியரசர்கள் கடமையாகும்.

உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் ஜாமீன் மனுவை விசாரித்த பிறகு ஏழெட்டு மாதங்கள் காலங்கடத்தி அந்த மனுவை தள்ளுபடி செய்வாரேயானால் அது அவரது திறனாற்றலை அம்பலப்படுத்துகிறது. ஓய்வுபெறும் தருவாயில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இதை செய்வாரேயென்றால் அது தேவையற்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்கிறது. ஓய்வுபெற்ற பிறகு நிர்வாகத்துறை அந்த நீதியரசருக்கு கவர்ச்சிமிக்க பதவியைக் கொடுக்குமென்றால் அந்த முடிவு தவிர்க்கமுடியாமல் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கிறது.

**உயரிய நோக்கம் ஊழலைத் தடுப்பது என்பதால் கருப்பு பண மாற்று தடுப்பு சட்டத்தின் (Prevention of Money Laundering Act/PMLA) பிரிவுகள் மிகவும் கடுமையானவையாக உள்ளன என்று கூறப்படுகிறது. தயவு செய்து இது குறித்து விரிவாகக் கூற முடியுமா?**

PMLA சட்டத்தின் பிரிவுகள் மிகக்கடுமையானவை என்பதில் சந்தேகமில்லை. அவற்றுள் பல குற்றவியல் நீதியியலின் (criminal jurisprudence) அடிப்படைக் கோட்பாடுகளை மீறுவதாக அமைந்துள்ளன. இந்த சட்டம் விசாரணை அதிகாரிகளுக்கு (Investigating Officers/IOs) ஏராளமான அதிகாரங்களை வழங்குகிறது. இவை அச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கிறது. புலனாய்வு மேற்கொள்ளும் நிறுவனம் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் நடந்துகொள்ளும் என்று இச் சட்டப்பிரிவுகள் எதிர்பார்க்கின்றன அல்லது அனுமானம் செய்துகொள்கின்றன. நடைமுறையில் அப்படி நடக்கின்றனவா என்பதே கேள்வி.

குறிப்பிட்ட அரசியல் எதிராளிகளே இலக்குக்குள்ளாக்கப்படுகிறார்கள், அதிகாரத்திலிருக்கும் கட்டமைப்பிற்கு ஆதரவானவர்கள் பூர்வாங்க விசாரணை கூட இல்லாமல் தப்பித்துவிடுகின்றனர் என்ற நம்பிக்கையை சமீபத்திய நிகழ்வுப்போக்குகள் வலுப்படுத்துகின்றன. இச்சட்டத்தின் குற்றவியல் பிரிவுகள் எத்தகைய பொத்தாம்பொதுவான மொழியில் பொதிந்திருக்கிறது என்றால் இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என்றாலும் எந்த ஒருவரும் தக்க ஆதாரமின்றி கூட கைதுசெய்யப்படலாம்.

விசாரணையைத் துவக்க ECIR (அமலாக்க வழக்கு தகவலறிக்கை/Enforcement Case Information Report) ஒன்று பதிவுசெய்யப்படுகிறது. இந்த ECIR இரகசியத்தன்மை வாய்ந்தது. மற்ற வழக்குகள் விஷயத்தில் உள்ளது FIR பதிவு செய்யப்பட்டு அதன் ஒரு பிரதி நீதிமன்றத்துக்கு அனுப்பப்படுவது போலன்றி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கோ அல்லது இன்னும் எவருக்கோ இந்த ECIR பிரதி கொடுக்கப்படுவதில்லை.

PMLA சட்டத்தின் பிரிவு 45 படி குற்றம்சாட்டப்பட்டவர் அக் குற்றத்தை புரியவில்லை என முதன்மை முகாந்திரத்தின் அடிப்படையில் நீதிமன்றம் நம்பும் பட்சத்தில் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். ஆனால் சாதாரண சட்டப்படி பிரதிவாதி / அரசு தரப்பே முதன்மை முகாந்திரத்தில் நிலைநிறுத்தியாக வேண்டும். பிரிவுகள் 50(2) மற்றும் (3) ஆகியவற்றின் படி விசாரணை அதிகாரிக்கு யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை குற்றத்தில் சிக்கவைக்கக்கூடிய கேள்விகளுக்கு கூட அவர் பதிலளித்தாக வேண்டும். ஆதாரத்தை அங்ஙனம் வாக்குமூலமாக பதிவு செய்வது நீதிமன்ற நடைமுறையாக கருதப்படுகிறது. சாட்சி

பொய் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூட வழக்குக்குள்ளாக்கப்படலாம். சந்தேகத்துக்குரிய நபரை கைது செய்ய விரிவான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. நடைமுறையில், பிரிவு 50(2) இன் கீழ் சாட்சியாக ஒருவர் அழைக்கப்படுகிறார், பின்னர் இறுதியில் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் கைது செய்யப்படுகிறார். பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணையில் ஒத்துழைக்கவில்லை, எனவே போலீஸ் காவலில் அவர் விசாரிக்கப்படவேண்டும் என போலீஸ் காவலில் 14 நாட்கள் (அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நாட்கள்) விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படுகிறது.

சுருங்கக்கூறுவதானால், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எத்தகைய விரிவான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றால் அவர்கள் இலக்குக்குள்ளாகும் எவரும் முடிவின்றி கஷ்டங்களையும் சித்திரவதையையும் அனுபவிக்க நேரிடும். உச்ச நீதிமன்றம் கட்டுக்குள் நிற்குமாறு அதிகாரிகளை எச்சரிப்பதற்கு மாறாக பொருளாதாரக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முன்ஜாமீன் வழங்குவதற்கு எதிராக எச்சரித்துள்ளது.

முடிவாக, PMLA சட்டத்தின் பிரிவுகள் கடுமையானவை மட்டுமல்ல கொடுங்கோன்மைத்தன்மை வாய்ந்தவை; புலனாய்வு நிறுவனத்திற்கு வரம்பற்ற தங்குதடையற்ற அதிகாரங்களை அளிக்கிறது. இச் சட்டம் ஊழலை ஒழிக்கும் அல்லது குறைக்கும் என்ற வாதம் முற்றிலும் தவறு. அரசாங்கத்தின் நிலை என்னவென்றால் PMLA சட்டம் சட்டவிரோதமாக சொத்து குவித்தவர்கள் அதை கறைபடியாத சொத்தாகக் காட்டி அனுபவிப்பதை தடுப்பதற்கான சட்டம். அரசு ஊழியர் ஒருவரை குற்றம் செய்வதிலிருந்து இது தடுக்குமா என்பது கேள்விக்குறி. எப்படியிருப்பினும் துணைக் குற்றம் (predicate offence, ஊழல் குற்றம் முக்கிய குற்றம் என்றால் கறுப்புப் பண மாற்றம் துணைக்குற்றம்) ஒன்றுக்காக தண்டிக்கப்படும்பட்சத்தில் அவர் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்ததாக வேண்டும்.

**நீதிமன்றக் காவலுக்கு மாறாக போலீஸ் விசாரணைக் காவலில் வைத்து விசாரிப்பது பல மேடைகளில் விவாதத்துக்குரிய பொருளாகியுள்ளது. விசாரணையாளர்கள் முதலில் தேர்ந்தெடுக்கும் முறையாக அது இருக்கலாகுமா? குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்வதை அது துரிதப்படுத்துமா? அது அரசியல்சட்ட விதிகளுக்கு எதிரானதா? குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விசாரணைக் காவலில் மௌனம் சாதிக்கலாகுமா அல்லது பதிலளிக்காமல் ஏமாற்றலாமா? அப்படி செய்யலாமெனில் அத்தகைய விசாரணையின் நோக்கமே அர்த்தமற்றதாகிறது அல்லவா? இது குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?**

குற்றவியல் சட்டத்தின் அடிப்படையான கோட்பாடுகளில் ஒன்று குற்றம்சாட்டப்பட்டவர் மௌனம் சாதிப்பதற்கான உரிமை. இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 20 (3) எந்த ஒரு குற்றத்தையும் செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஒருவர் அவருக்கே எதிரான சாட்சியாக இருக்கும்படி நிர்பந்திக்கப்படக் கூடாது என வகைசெய்கிறது. இதன் பொருளென்னவென்றால் அவரைக் குற்றத்தில் சிக்கவைக்க எந்த ஆதாரத்தையும் அளிக்கும் படி குற்றம் சாட்டப்பட்டவர் நிர்பந்திக்கப்படக்கூடாது.

இந்த தத்துவத்திற்கு எதிராக சில வட்டாரங்களிலிருந்து விமரிசனம் நிலவினாலும் இன்றைய அளவில் குற்றம்சாட்டப்பட்டவர் மௌனம் சாதிப்பதற்கான அடிப்படை உரிமை உச்ச நீதிமன்றத்தால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சமீப காலங்களில் பல வழக்குகளில் புலனாய்வு நிறுவனங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என காரணம் காட்டி அவர்களுக்கு ஜாமீன் மறுக்குமாறும் அவர்களை போலீஸ் காவலில் வைக்குமாறும் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்கின்றனர்.

என் கருத்துப்படி விசாரணைக்கு காவலுக்கான இந்தக் கோரிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 20 (3) இல் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைக்கு எதிரானது. செல்வி மற்றும் ஏனைய சிலருக்கும் கர்நாடக அரசாங்கத்துக்குமிடையிலான வழக்கில் (2010 SCC 263) 5 , உச்ச நீதிமன்றம் இந்த அரசியல்சட்டப் பிரிவு குற்றம்சாட்டப்பட்டவர்களையும் சந்தேகத்துக்குள்ளானவர்களையும் சாட்சிகளையும் சிக்கவைக்கக் கூடிய அறிக்கைகளை கொடுக்குமாறு நிர்பந்திக்கப்படுவதிலிருந்து காக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு மெளனமாக இருக்கவும் விசாரணை நிறுவனத்தின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் இருக்கவும் உரிமை இருக்கிறது என்றால் விசாரணைக் காவலில் மட்டும் அத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி அவர் எங்கனம் நிர்ப்பந்திக்கப்பட முடியும்?

குற்றம் சாட்டப்பட்டவர் தனது உரிமையை பயன்படுத்தி மவுனமாக இருக்க விரும்பினால் அவரை சிக்கவைக்கக்கூடிய ஆதாரங்களை அளிக்குமாறு (சித்திரவதை முறைகள் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ) நிர்பந்திக்கலாம் என்று விசாரணைக் காவலுக்கு பொருளா? குற்றம் ஒன்றை புரிந்ததாக ஒப்புக்கொள்ளும்படி குற்றம்சாட்டப்படுபவர் நிர்பந்திக்கப்படுகிறார் என்று அதற்கு பொருளாகாதா?

அரசு தரப்பில் எப்போதும் முன்வைக்கப்படும் மற்றொரு வாதம் என்னவென்றால் தமது அறிக்கையை கொடுக்கும்படி குற்றம்சாட்டப்பட்டவர் அழைக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய அழைப்பை ஏற்று அவர் தனது அறிக்கையை கொடுத்தாலும் அவர் விசாரணையோடு ஒத்துழைப்பதில்லை என்பதாகும். புலனாய்வு நிறுவனம் விரும்பும்படி அவர் அறிக்கை கொடுக்க வேண்டும் என இதற்கு பொருளா? பல தருணங்களில், புலனாய்வு நிறுவனங்களின் வாதம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையில் ஏய்க்கிறார், விசாரணை அதிகாரியின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதில்லை என்பதால் நீதிமன்றம் விசாரணைக்கு காவலில் வைத்து விசாரிக்க அவரை போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கவேண்டும் என்பதாகும். துரதிருஷ்டவசமாக, இத்தகைய நியாயமற்ற வாதங்கள் நீதிமன்றங்களால் சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது குற்றம் சட்டப்பட்டவர்களின் அடிப்படை உரிமையை மீறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மெளனமாக இருப்பதற்கான தனது உரிமையை பயன்படுத்த விரும்பினால் விசாரணைக்கு காவலுக்காக அவர் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்படக் கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கும் பொறுப்பு அரசு தரப்புக்கு உள்ளது; நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி இது நிரூபிக்கப்படவேண்டும். அரசு தரப்பு தனது வழக்கை நிரூபிக்க குற்றம் சாட்டப்பட்டவரை நிர்பந்தப்படுத்தி பெறப்படும் அறிக்கை எதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது. உண்மையில் பார்த்தால், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 313 குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்களாக காட்டப்படும் விஷயங்கள் குறித்து விளக்கமளிக்க ஒரு அவகாசம் அளிக்கையில், எந்த விளக்கமும் கொடுக்காமல் இருப்பதற்கான சுதந்திரமும் அவருக்கு உள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 313 இன் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இல்லை.

பிரிவு 313ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கையை பதிவு செய்யும் போது அவர் உறுதி மொழி எதுவும் எடுக்க வேண்டியதில்லை என்பது முக்கிய விஷயம். கேள்விகளுக்கு பதிலளிக்கையில் முழு உண்மையையம் அவர் தெரிவித்தாக வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் பின்னணியிலுள்ள கோட்பாடாகத் தெரிகிறது. இந்த பின்னணியில் பார்த்தால் விசாரணைக் காவலில் வைத்து விசாரிப்பது என்ற கருத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மெளனமாக இருப்பதற்கான உரிமையும் ஒன்றுக்கொன்று நேரெதிரான முரண்பட்ட கருத்துகளாக உள்ளன என்பதைக் காணலாம். மெளனமாக இருப்பதற்கான குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை அவரது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படும் வரையில் அவரை விசாரணைக் காவலில் வைத்து விசாரிப்பதையே நோக்கமாகக் கொண்ட போலீஸ் காவலில் அவரை ஒப்படைக்க எந்த நீதிமன்றத்துக்கும் அனுமதி இல்லை.

(பேட்டியின் தொடர்ச்சி இன்று மாலை 7 மணி பதிப்பில்)

[பயங்கரவாதத்தைவிட பெரிய ஆபத்து நீதித்துறையின் சுதந்திரம் இழப்பு!](https://minnambalam.com/k/2019/10/05/19)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share