>சிண்டிகேட் தடை; அதை உடை!

public

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 21

**இராமானுஜம்**

‘எவன்டா உங்களைப் படம் வாங்க சொன்னது?’ என்று விநியோகஸ்தர்களைக் கேள்வி கேட்டு அவமானப்படுத்திய சேலம் இளங்கோ, புருஷோத்தமன் தரப்பு புதிய படங்களின் விநியோக உரிமைகளை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2005இல் சேலம் ஏரியாவில் வெறும் 11 திரையரங்குகளுடன் தொடங்கப்பட்டது இளங்கோ தலைமையிலான சிண்டிகேட் அமைப்பு. இன்றைக்கு 40க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இந்த அமைப்புக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறது. கட்டுப்படாத தியேட்டர்கள் குத்தகை அடிப்படையில் இணைக்கப்பட்டு வாடகை தரப்பட்டுவிடும். அதற்கும் கட்டுப்படவில்லையென்றால் அந்தக் குறிப்பிட்ட தியேட்டரில் புதிய படங்கள் வெளியிடாமல் இருக்க சம்பந்தப்பட்ட விநியோகஸ்தருக்கு நெருக்கடி கொடுத்து தியேட்டரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார் புருஷோத்தமன் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

சேலத்துக்குப் புதிய படங்களை வாங்கிக்கொண்டிருந்தவர்கள் கஸ்தூரி பிலிம்ஸ் அசோக் சாம்ராட், 7G பிலிம்ஸ் சிவா, அவ்வப்போது ரெட்ஜெயன்ட் செண்பக மூர்த்தி, மதுரை அழகர்சாமி, கோவை காஸ்மோ சிவா ஆகியோர் மட்டுமே. அவ்வப்போது வாங்குபவர்கள் சிண்டிகேட் அமைப்புடன் இணக்கமாகப் போய்விடுவார்கள். ஏனென்றால் இவர்கள் விநியோக அடிப்படையில் படங்களை வாங்குவதால் என்ன வசூல் என்றாலும் இவர்களைப் பாதிக்காது. தயாரிப்பாளர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சிண்டிகேட் கொடுக்கும் வசூல் கணக்குகளில் தவறு கண்டுபிடிக்க மாட்டார்கள்.

அவுட்ரேட் அடிப்படையில் படம் வாங்கும் சாம்ராட், சிவா இருவரும் சிண்டிகேட் தரப்பால் சிரமப்பட்டதாகக் கூறுகிறார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்டால் சிரிப்பே பதிலாக வருகிறது. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீசாகும்போது ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அல்லது ரெகுலர் காட்சிக்கு மொத்தமாக அல்லது 150, 200 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்கப்படும். இதன் மூலம் தியேட்டருக்கும் விநியோகஸ்தருக்கும் முதல் நாளே அசலில் 30% முதல் 40% மொத்த வசூல் ஆகிவிடும். ஆனால் சிண்டிகேட் கட்டுப்பாட்டில் உள்ள தர்மபுரியில் இது நடக்காது. சிண்டிகேட்டே டிக்கெட்டுகளை விற்றுவிட்டு அரசு நிர்ணயித்த ரூபாய் 30 அடிப்படையில் விநியோகஸ்தருக்குக் கணக்கு கொடுப்பார்கள். சேலம் ஏரியா சிண்டிகேட்டுக்குள் தர்மபுரி நகர தியேட்டர் சிண்டிகேட் சக்திமிக்கது.

ரசிகர் மன்றச் சிறப்புக் காட்சி மூலம் ஒதுக்கப்பட்ட பணம்தான் இன்றைக்குப் படம் திரையிட அட்வான்ஸாகப் பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் தயாரிப்பாளர்களுக்குத் தேவைப்படும் குறைந்த அளவு ஃபைனான்ஸ் கொடுக்கவும் இந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

கடந்த 13 ஆண்டுகளில் ரசிகர் மன்ற டிக்கெட் விற்பனை மூலம் மறைக்கப்பட்ட தொகை கோடிக்கணக்கில் தேறும் எனக் கூறப்படுகிறது. இவை எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டியது. தற்போது அசோக் சாம்ராட் இவர்களுடன் முரண்பட்டதால் சேலம் ஏரியாவுக்கு படங்கள் பெரிய அளவில் வாங்குவதில்லை என்கிறார்கள். 7G சிவா இவர்களுடன் வரவு செலவு வைத்திருப்பதால் இரு தரப்பும் சுமுகமாகவே வியாபார தொடர்புகளில் பயணிக்கின்றனர் என்கின்றனர் சேலம் சினிமா நகர் விநியோகஸ்தர்கள். அப்புறம் ஏன் விநியோகத் துறையில் சிண்டிகேட் அமைப்பு தீவிரம் காட்டுகிறது.

இந்த அமைப்பு உருவானபோது இவர்களின் தில்லு முல்லு கணக்கு, எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத போக்கால் சிண்டிகேட் தரப்பில் உள்ள தியேட்டர்களுக்குப் படம் கொடுக்கத் தடை விதித்தது சேலம் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம். சங்கத்தின் முடிவை மாற்ற முடியவில்லை. ஆனால், தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்கப் பாரம்பரியம் மிக்க, பலம் பொருந்திய சேலம் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு எதிராக ப்ரியம் படத் தயாரிப்பாளரும், அன்றைக்கு சேலம் ஏரியா முன்னணி விநியோகஸ்தருமான அசோக் சாம்ராட்டை வைத்து புதிய சங்கத்தைத் தொடங்க வைத்தார்கள்.

இதனால் இரண்டு சங்கங்களிலும் உறுப்பினர்களாக இருந்து கொண்டு சிண்டிகேட் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட விநியோகஸ்தர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழிலில் இல்லை அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டார்கள். தற்போது சேலம் ஏரியா திரைப்பட விநியோக மைதானம் போட்டிக்கு யாருமின்றி காலியாக இருப்பதால் அதில் தன்னை ராஜாவாக நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியே புதிய படங்களின் விநியோக உரிமையை வாங்க முயற்சிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருப்பது.

அப்படி அது நடந்துவிட்டால் விநியோகஸ்தர்களை மிரட்டியது போல, சேலம் ஏரியாவில் உள்ள பிற தியேட்டர்கள் மிரட்டப்படலாம், தயாரிப்பாளர்கள் மிரட்டப்படலாம். மிகப்பெரும் பொருளாதார இழப்பை சேலம் ஏரியாவில் தயாரிப்பாளர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி?

நாளை காலை 7 மணிக்கு…

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

*மின்னஞ்சல் முகவரி:* entertainment@minnambalam.com

[பகுதி 1](https://www.minnambalam.com/k/2018/02/23/66) [பகுதி 2](http://minnambalam.com/k/2018/02/24/59) [பகுதி 3](https://minnambalam.com/k/2018/02/26/48) [பகுதி 4](https://minnambalam.com/k/2018/02/27/53) [பகுதி 5](https://www.minnambalam.com/k/2018/02/28/70) [பகுதி 6](https://minnambalam.com/k/2018/03/02/56) [பகுதி 7](http://minnambalam.com/k/2018/03/05/10) [பகுதி 8](https://minnambalam.com/k/2018/03/06/15) [பகுதி 9](https://minnambalam.com/k/2018/03/07/13) [பகுதி 10](https://minnambalam.com/k/2018/03/08/15) [பகுதி 11](https://www.minnambalam.com/k/2018/03/09/35) [பகுதி 12](http://minnambalam.com/k/2018/03/10/6) [பகுதி 13](http://www.minnambalam.com/k/2018/03/11/13) [பகுதி 14](http://minnambalam.com/k/2018/03/12/26) [பகுதி 15](http://www.minnambalam.com/k/2018/03/13/34) [பகுதி 16](http://www.minnambalam.com/k/2018/03/14/29) [பகுதி 17](http://minnambalam.com/k/2018/03/15/35) [பகுதி 18](http://minnambalam.com/k/2018/03/16/33) [பகுதி 19](http://minnambalam.com/k/2018/03/17/32) [பகுதி 20](http://minnambalam.com/k/2018/03/19/23)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *