<சிக்கலில் தீபிகா படம்!

Published On:

| By Balaji

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் படத்துக்கு ஏற்பட்டுள்ளது புதிய சிக்கல். தற்போது அவர், சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன உறுப்பினர்கள் (FWICE) போராட்டத்தால் படத்தை நிறைவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு, எட்டு மணிநேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்துக் கடந்த சில நாட்களாகத் திரைப்பட தொழிலாளர்கள் (FWICE) போராடிவருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வு எட்டப்படாததால் சிலர் தற்போது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நவம்பர்17 ஆம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்புடன் தொடங்கப்பட்ட ‘பத்மாவதி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை. இந்த போராட்டத்தால் படப்பிடிப்பை நிறைவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் நிறையக் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியிருப்பதால் படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்ற இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதிக பொருள் செலவில் எடுக்கப்படுவதால் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட்டே ஆகவேண்டும் என்று கூறியதையடுத்து இயக்குநர் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நியூஸ்18 செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஒருநாளைக்கு 18 மணிநேரம் வேலை செய்துவந்த நிலையில் தற்போது நடைபெறும் தொழிலாளர்களின் போராட்டத்தால் 10 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் FWICE வேலைநிறுத்தத்தால் திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து, நவம்பர் 17 அன்று வெளியிடக் கடினமாக உழைத்துவருவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel