`சிஏஏவுக்கு எதிராக 1 கோடி கையெழுத்து!

Published On:

| By Balaji

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக தலைமையிலான கூட்டணி இன்று (பிப்ரவரி 2) தொடங்கியது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிஏஏவுக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் 144 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் சிஏஏவுக்கு எதிராக பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் கையெழுத்து இயக்கம் இன்று தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களால் துவங்கப்பட்டது.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு முதல் கையெழுத்து இட்டு, கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். நகரில் வீதி வீதியாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து சிஏஏவுக்கு எதிராக கையெழுத்து பெற்றார்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய ஸ்டாலின், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், தடியடிகள், துப்பாக்கிச் சூடு என அனைத்திற்கும் காரணம் அதனை ஆதரித்து வாக்களித்த அதிமுகவும், பாமகவும்தான். சிஏஏவை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டுவந்து, அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்தினேன். ஆனால், அது ஆய்வில் உள்ளது என்று கூறி கடைசி வரை எடுத்துக்கொள்ளவில்லை. அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டிருந்தால் இந்த ஆட்சி இருந்திருக்காது. அத்தோடு, ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சிறைக்கு சென்றிருப்பர்” என்று விமர்சித்தார்.

சிஏஏவுக்கு எதிராக பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் கையெழுத்தைப் பெறுகிறோம். அனைத்து கையெழுத்துப் பிரதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார் ஸ்டாலின்.

சென்னை துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திமுக எம்.பி தயாநிதி மாறன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்து இயக்கத்தைத் துவங்கினார். இதுபோல தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை துவங்கினர்.

பாபநாசத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனும், மதுரையில் ஜவாஹிருல்லாவும், ஈரோட்டில் ஈஸ்வரனும் கலந்துகொண்டனர்.

இதுபோலவே ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஒன்றியம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிலையங்கள், தேனீர் கடைகளில் முகாம்கள் அமைத்து, சிஏஏவுக்கு எதிரான பாதிப்புகளை விளக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெறுகின்றன. தமிழகம் முழுவதும் இந்த நிகழ்வு வரும் 8ஆம் தேதி வரை நடைபெறும். அதன்பிறகு அனைத்து கையெழுத்துப் பிரதிகளும் 9,10 தேதிகளில் திமுக தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கப்படும். அவை திமுக கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share