உலக அரசியல் பழகு! 3 -ஆரா
வெனிசூலாவின் மீது இப்போது வேயப்பட்டிருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கும் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி ஐநா பொது அவையில் வெனிசூலா நாட்டின் அப்போதைய அதிபர் சாவேஸ் ஆற்றிய உரைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை உலக நாடுகளின் தலைவர்கள் ஐநாவில் உரையாற்றினார்கள்.
செப்டம்பர் 19ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் உரையாற்றினார். அடுத்த நாள் 20ஆம் தேதி லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலா அதிபர் சாவேஸ் உரையாற்றினார்.
ஐநா பொது அவையில் உரையாற்ற வரும்போது கையில் ஒரு கனமான புத்தகத்தையும் கொண்டுவந்தார் சாவேஸ். அனைவருக்கும் வணக்கம் சொன்னவர் அடுத்து அந்த புத்தகத்தில் இருந்து தான் உரையைத் தொடங்கினார். Hegemony or Survival: America’s Quest for Global Dominance என்ற புத்தகத்தைதான் உயர்த்திப் பிடித்து உலகத்துக்குக் காட்டினார் சாவேஸ். Noam Chomsky என்பவர் எழுதிய புத்தகம் அது. மேலாதிக்கம் அல்லது உயிர் பிழைத்தல்: பூமியை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்கத் தேடல் என்ற அந்த புத்தகத்தை தன் கையில் ஏந்திய சாவேஸ்,
“இதுவரை இந்த புத்தகத்தைப் படித்திராதவர்கள் உடனடியாக படிக்குமாறு அழைக்கிறேன். இதை எழுதியவர் உலகத்தின் மிகச்சிறந்த ஞானவான்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த நோம் சாம்ஸ்கி. இருபதாம் நூற்றாண்டிலும் இப்போதும் இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும் மிக முக்கியமான புத்தகம்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க வெறி உலகத்தின் ஒவ்வொரு உயிருடைய வாழ்வையும் ஆபத்து மிக்கதாக ஆக்குகிறது. இந்த ஆபத்தைப் பற்றி நாம் உலகுக்குத் தொடர்ந்து எச்சரிக்கிறோம். நம் அடிவயிற்றில் செருகப்பட்ட வாள் (தலைக்கு மேல் தொங்கும் கத்தி என்றும் பொருள்படும்) போன்ற இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துமாறு அமெரிக்க மக்களிடமும் உலக மக்களிடமும் நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
இந்தப் புத்தகம் எளிதில் வாசிக்க முடிகிற ஒரு புத்தகம். நம்மோடு மிகவும் நெருங்கிவிடும் ஒரு புத்தகம். இது ஆங்கிலம், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அரேபிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை முதலில் படிக்க வேண்டியது என்னுடைய அமெரிக்க சகோதர சகோதரிகள்தான். காரணம் உலகத்தின் அச்சுறுத்தல் அவர்களின் தாய் நாட்டில்தான் இருக்கிறது. சாத்தான் அங்குதான் இருக்கிறது.
அந்தச் சாத்தான் நேற்று இங்கேகூட வந்திருந்தது. (ஐ.நா. அவையில் கைதட்டலும் சிரிப்பொலியும் எழுந்தது) ஆம், அந்தச் சாத்தான் நேற்று இதே இடத்தில், இப்போது நான் நின்றுகொண்டிருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தது. அதன் அழுகிய நாற்றம் இன்னும் இங்கே வீசிக்கொண்டிருக்கிறது. நேற்று இங்கே பேசிவிட்டு சென்ற அமெரிக்க அமெரிக்க அதிபரைத்தான் நான் சாத்தான் என்று சொல்கிறேன். நேற்று அவர் ஆற்றிய உரையை ஒரு மனநல மருத்துவரிடம் கொண்டுசெல்ல விரும்புகிறேன். ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழலாக நேற்று அவர் இங்கே தனது நடப்புத் திட்டங்களையும் செயற்பாடுகளையும் பற்றி விளக்கினார். அவரது உரைக்கு சாத்தானின் ரெசிப்பி என்று தலைப்பு வைக்க விரும்புகிறேன். உலக சர்வாதிகாரத்தை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது” என்று சாவேஸ் பேசப் பேச உலகத்தின் அத்தனை மொழிகளிலும் அது பேசுபொருளாகியது.
ஐ.நா.வில் கம்பீரமான உடல்மொழியோடு, காத்திரமான கொள்கை வீச்சுகளோடு, சரித்திரத்தின் இருட்டுப் பக்கங்கள் மீது தன் வெளிச்ச வார்த்தைகளை பாய்ச்சினார் வெனிசூலாவின் அதிபர் சாவேஸ்,.
அமெரிக்க அதிபரை, அமெரிக்காவை சாத்தான் என்று அழைத்தது மட்டுமல்ல… ஐநாவின் மறு கட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்தார் சாவேஸ்.
“ஒவ்வொரு வருடமும் நாடுகளின் தலைவர்கள் வந்து உரையாற்றுகிற ஒரு நல்ல தளமாக ஐ.நா. இருக்கிறது. இது மட்டுமல்ல இங்கே நீண்ட ஆவணங்களை தயாரித்தல், அது சம்பந்தமான நல்ல கருத்துக்களை எதிரொலித்தல் போன்றவை ஐநா மன்றத்தில் இடம்பெற்று வருகின்றன. ஆனால் அதே நேரம் இப்படியே இருந்துவிடக் கூடாது. ஐநாவை மறு கட்டுமானம் செய்ய வேண்டிய தருணம் இது.
தலைவர் அவர்களே கடந்த வருடம் நாம் எடுத்துக்கொண்ட முக்கியமான முன்மொழிவுகளை ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்க முடியாது. அவை மன்றத்தின் உறுப்பு நாடுகளால் விவாதிக்கப்பட்டாக வேண்டும்.
அதில் முதலாவது முக்கியமான அம்சமாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மற்றும் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகள் பட்டியலுக்குள் புதிய நாடுகள் கொண்டுவரப்படவேண்டும். மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த வளர்ந்த வளரும் நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட வேண்டும்.
இரண்டாவதாக உலகத்தின் முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படையான முறையில் விவாதித்து முடிவெடுக்கும் வீரியம் மிகுந்த வழிமுறையினை ஏற்படுத்த வேண்டும்.
மூன்றாவதாக ஜனநாயகத்துக்கு எதிரான வீட்டோ அதிகாரம் என்ற பொறிமுறையை ஒடுக்க வேண்டும். இது இன்று உலகத்தின் பொதுவான குரலாக மாறிவருகிறது. வீட்டோ என்ற அமெரிக்காவின் நீதிநெறியற்ற அதிகாரம் என்பது இதோ நம் கண்ணெதிரே இஸ்ரேல் படைகள் லெபனானுக்குள் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தையும் தாண்டி நுழைந்து தாக்குவதன் மூலம் தெளிவாகிறது.
இறுதியாக வெனிசூலாவின் கோரிக்கை. ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளருடைய அதிகாரங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும். நேற்று கூட ஐ.நா. பொதுச் செயலாளர் பேசும்போது, கடந்த பத்தாண்டுகளில் பசி, பட்டினி, துயரம், வன்முறை, மனித உரிமை மீறல்கள் என்று உலகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மேலும் சிக்கலாகிக் கொண்டே இருப்பதாகக் குறிப்பிட்டார். ஐ.நா. பொறிமுறையின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதலால்தான் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே அமெரிக்காவின் கைப்பாவையாக இல்லாமல் ஐநா பொதுச் செயலாளர் உறுதியான அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் சாவேஸ்.
இந்த நான்கு கோரிக்கைகளுமே ஐ.நா.வில் இப்போது வரை நிலவிவரும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு எதிரான பிரகடனம். அமெரிக்காவின் அடிமடியில் கை வைக்கும் அழுத்தங்கள். அடிமடியில் என்பதை விட சாவேஸ் பாஷையிலேயே சொல்லப் போனால், உலகத்தினரின் அடிவயிற்றில் செருகப்பட்ட வாள் என்று அமெரிக்காவை சாவேஸ் வர்ணித்தார். ஆனால் இந்தப் பேச்சைக் கேட்டவர்களோ அமெரிக்காவின் அடிவயிற்றில் செருகப்பட்ட வாள் என்று சாவேஸை வர்ணிக்க ஆரம்பித்தனர். உலகை உலுக்கிய உரைகளில் ஒன்றானது அது.
இப்படி ஓர் உரையை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்தபடி ஆற்றிவிட்டுப் புறப்பட்டார் சாவேஸ். அப்போது முதல் வெனிசூலா தேசத்தின் விதியை மாற்றி எழுத மேலும் அதிக முனைப்பு காட்டியது அமெரிக்கா.
(அடுத்த சனிக் கிழமை சந்திப்போம்)
[வெனிசூலா: இரு அதிபர்கள், ஒரே காரணம்!]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/11/17)
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”