சாலை விரிவாக்கத்தின்போது ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு!

public

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்கப் பணியின்போது ராட்சத குடிநீர் குழாய் உடைந்த நிலையில் நகர மன்றத் தலைவர் விரிவாக்கப் பணிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் நெல்லிக்குப்பம், கடலூர் கோண்டூர் முதல் மடப்பட்டு வரை ரூ. 230 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட குடிதாங்கிச்சாவடி வெள்ளப்பாக்கத்தான் வாய்க்கால் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது நெல்லிக்குப்பத்தில் இருந்து குடிதாங்கிச்சாவடி பகுதி மக்களுக்கு குடிநீர் செல்லும் ராட்சத குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் இதுபற்றி நகராட்சி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் நகரமன்றத் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், இளநிலை உதவியாளர் பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை விரிவாக்க பணியை உடனடியாக தடுத்து நிறுத்தினர்‌.
மேலும் ராட்சத குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு நகர மன்றத் தலைவர் உத்தரவிட்டார். மேலும் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிகளில் ஈடுபடும் போது நகராட்சி அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்து, அவர்கள் முன்னிலையில் பணிகளை தொடங்குமாறு எச்சரித்தார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0