தமிழ்த் திரைப்படங்கள் பற்றித் தொடர்ச்சியாகத் தனது கருத்தை முன்வைத்துவருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அஜித்தின் விவேகம் படம் பார்த்துவிட்டு காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தார். இதன் காரணமாக அஜித் ரசிகர்களுக்கும் சாருவுக்கும் வார்த்தைப் போர் முற்றிக் கொலை மிரட்டல் வரை சென்றது. தற்போது விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளிவரவுள்ள மெர்சல் படத்தின் கேரக்டர் குறித்து கருத்து தெரிவித்ததற்கு விஜய் ரசிகர்களால் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சாரு தனது ட்விட்டர் பக்கத்தில், **வெற்றி – விஜய் – ஹீரோ, டேனியல் – எஸ்.ஜே. சூர்யா – வில்லன், இந்தக் காலத்திலுமா இப்படி? இன்னும் நீங்க திருந்தவே மாட்டீங்களா?”** எனப் பதிவிட்டுள்ளார். அவரின் கருத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தபடியுள்ளன. இதில் விஜய் ரசிகர் ஒருவர் உச்சத்துக்குப் போய், கொலை மிரட்டல் விடுப்பதுபோல மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில், **”சார்.. மெர்சல் திரைப்படத்துக்கு இது போன்று விமர்சனத்தை முன்வைத்தால், நிறைய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் வீட்டின் முகவரியும், நீங்கள் தினமும் காலையில் நடைபயணம் மேற்கொள்ளும் இடமும் நான் அறிவேன். ஆகையால் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இந்த விஷயத்திலிருந்து ஒதுங்கி இருங்கள்”** என்று தெரிவித்துள்ளதாகத் தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சாரு.
இந்த கருத்துக்கு மறுமொழியாக, “இந்தக் கடிதம் எழுதியவரை சைபர் க்ரைம் மூலம் கண்டு பிடித்துவிடலாம். ஆனால் மெர்சல் விமர்சனம் எழுதினால் இன்னும் பெரிய மிரட்டல் எல்லாம் வரும். கொலைகூடச் செய்வார்கள். விஜய் ரசிகர்களே, உங்களால் எனக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் விஜய்க்குத்தான் தீராப் பழி ஏற்படும். தன்னுடைய ரசிகர்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல் வளர்த்து வைத்திருக்கிறார் விஜய். இந்த மிரட்டலுக்கு விஜய் பதில் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எந்த விஜய் ரசிகராலும் என் உயிர் போனாலோ நான் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டாலோ அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படமாட்டேன். எனக்கு மரணம் உங்கள் மூலம்தான் வரும் என்றால் வரட்டும். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டேன். நான் பயப்படுவது என் கடவுளுக்கு மட்டும்தான். என் உயிருக்கு பயந்து மெர்சலைப் பற்றி விமர்சிக்காமல் இருந்தால் ஒரு தும்மல் வந்துகூட சாவேன். சாவுக்குப் பயந்தவனா எழுத்தாளன்? என் வீட்டுக்கு வா தம்பி. நான் தினந்தோறும் போகும் நாகேஸ்வர ராவ் பார்க்குக்கும் வா. நாட்டில் போலீஸ் இருக்கிறது; கோர்ட் இருக்கிறது; கடவுளும் இருக்கிறார். ஒளிந்துகொண்டு எனக்கு மிரட்டல் விடும் விஜய் ரசிகரே, உங்கள் உண்மைப் பெயரையும் உங்கள் விலாசத்தையும் தருவீரா? தராவிட்டாலும் பரவாயில்லை, சைபர் க்ரைமில் கண்டு பிடித்துவிடுவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
�,”