சாதனையை நோக்கிய பயணம் – வீழ்ந்த வீரனின் எழுச்சி

public

மாண்டோ கொர்லோ ரோலக்ஸ் மாஸ்டர் க்ராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கான போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. கடந்த வருடம் சரியாக விளையாடாமல் தனது ரேங்கிங்கை இழந்த ரஃபேல் நடால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மாஸ்டர் பட்டத்தை வென்று தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். கேல் மோனிஃபில்ஸை 7-5, 5-7, 6-0 என்ற செட் கணக்கில் நடால் வீழ்த்திய ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால், நான்கு முன்னணி ஆட்டக்காரர்கள் மோதிய செமி ஃபைனல்ஸை விட, ஃபைனல் சிறப்பாக அமையவில்லை என்பதே டென்னிஸ் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. டென்னிஸ் போட்டிகளில் ஃபைனல் ஆட்டங்களை விட செமி ஃபைனல் ஆட்டங்கள்தான் அனல்பறக்கும் ஆட்டங்களாக அமையும். 2016-ம் வருடத்தின் மாண்டோ கொர்லோ போட்டியும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை.

ரஃபேல் நடாலும் ஆண்டி முர்ரேவும் இதுவரை 24 முறை நேருக்குநேர் சந்தித்திருக்கிறார்கள். இதில் 17 முறை நடாலும், 6 முறை முர்ரேவும் ஜெயித்திருக்கிறார்கள். ஒரு ஆட்டம் பாதியில் நின்றுவிட்டது. 16-ஆக இருந்த நடாலின் வெற்றிக்கணக்கு 17-ஆக மாறியது, மாண்டோ கொர்லோ ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் செமி ஃபைனல் ஆட்டத்தில் தான். அதிக உயரத்தின் காரணமாக வேகத்துக்குப் பெயர் பெற்ற ஆட்டக்காரர் முர்ரே. விரைவான ஷாட்களுக்கும், அதே சமயம் இரு கைகளில் ஆடும் ஸ்டைலுக்கும் பெயர் பெற்ற வீரர் நடால். மண் நிறைந்த ஆடுகளத்தின் கிங், நடால் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட இருவர் மோதிய செமி ஃபைனல் சுவாரஸ்யம் குறைவானதாக இருக்குமா?

தொடர் மிஸ்டேக்குகளால் முதல் செட்டை முர்ரேவிடம் பறிகொடுத்தார் நடால். முர்ரேவின் அதிவேகமான ஆட்டத்தாலும், நடால் செய்த மிஸ்டேக்குகளாலும் முதல் செட் முர்ரேவின் பக்கம் அமைந்தது. இரண்டாவது செட்டில் துவங்கியது ஒரிஜினல் செமி ஃபைனல். ஒவ்வொரு பாயிண்ட்டையும் போராடி வென்றனர் இருவரும். பேக் ஹேண்ட் ஷாட்களை தொடர்ந்து இறக்கி முர்ரேவை மூன்றாவது பாயிண்ட்டில் திணறடித்தார் நடால். முர்ரேவின் மூன்றாவது பாயிண்ட் நடால் பக்கம் மாற, அந்த செட்டை அப்படியே தனதாக்கினார் நடால். கடைசி மற்றும் மூன்றாவது செட் சூரியனின் அனலில் தூசி பறக்கும் ஆட்டத்தில் துவங்கியது. இருவரும் எளிதில் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். நடால் சில பாயிண்ட்களை வெளியே அடித்து பல வாய்ப்புகள் கொடுத்தும் முர்ரே அவற்றை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார். வேகத்துடன் சேர்ந்து விவேகத்துடன் ஆடிய நடால், முர்ரேவின் வேகத்தையே அவருக்கு எதிராக திருப்பி மூன்றாவது செட்டின் இரண்டாவது பாயிண்ட்டை தனதாக மாற்றி ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கினார். பாயிண்ட்டை பறிகொடுத்து வெற்றிவாய்ப்பின் சதவிகிதத்தை இழந்த முர்ரே ஆக்ரோஷமாக ஆடினார். ஆனால் அதையும் நடால் சரியாக பயன்படுத்திக்கொண்டார். முர்ரே அந்த பக்கம் சென்றால் இந்த பக்கம் அடிப்பது, இந்தப் பக்கம் சென்றால் அந்தப் பக்கம் அடிப்பது என அவரது மனநிலை பாதிக்கும் அளவுக்கு ஆட்டத்தை மாற்றி விளையாடி மூன்றாவது செட்டை தனதாக்கி 2-6 6-4 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஃபைனலில் நுழைந்தார். தோல்வியை ஏற்றுக்கொண்டு, ‘இது சிறந்த ஆட்டம். உலகின் சிறந்த ப்ளேயருடன் விளையாடும்போது நாம் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் தவறினால் தோற்கத்தான் வேண்டும்’ என்று கூறினார் முர்ரே.

இன்னொரு செமி ஃபைனலில் சோங்கா, மோனிஃபில்ஸ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டம் அவ்வளவு சுவாரஸ்யமிக்கதாக இல்லை. சோங்காவின் வழக்கமான ஆட்டம் வெளிப்பட்டிருந்தால், இந்த ஆட்டமும் சுவாரஸ்யத்தை இழந்திருக்காது. ஆனால், மோனிஃபில்ஸ் போன்ற நீண்ட கைகளும், கால்களும் கொண்டு எந்தப் பக்கம் அடித்தாலும் தடுத்தாடுவதும், எந்தப் பக்கம் திரும்பி அடிக்கப்போகிறார் என தெரியாமல் ஆடுவதும் என சோங்கா திணறிப்போய்விட்டார். முதல் செட்டை 6-1 என தோற்றதுமே அவரது ஆட்டம் வேகத்தை இழந்துவிட்டது. அடுத்த செட்டிலும் அபரிமிதமாக விளையாடிய மோனிஃபில்ஸ் 6-3 என்ற செட்டில் வெற்றி பெற்று ஃபைனலில் நுழைந்தார். குவாட்டர் ஃபைனலில் உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ரோஜர் ஃபெடரரை 6-3, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் வீழ்த்திய சோங்காவின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இரு பெரும் ஆட்டக்காரர்களை வீழ்த்திவிட்டு மாஸ்டர் டைட்டிலுக்காக மோதினர் நடாலும், மோனிஃபில்ஸும். முதல் செட்டிலேயே இரண்டாவது பாயிண்ட்டை நடாலிடம் பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார் மோனிஃபில்ஸ். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோனிஃபில்ஸ் ஃபைனல் வரை வந்திருந்ததால், அவரை உற்சாகப்படுத்த பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் பெருமளவில் கூடியிருந்து, மோனிஃபில்ஸ் பாயிண்ட் வென்ற போதெல்லாம் உண்டான அளவுக்கதிகமான கைதட்டலே அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவிடாமல் செய்துவிட்டது என்பது டென்னிஸ் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், இரண்டாவது பாயிண்டை விட்டுக்கொடுத்த மோனிஃபில்ஸ் நான்காவது பாயிண்டை நடாலிடமிருந்து பறித்து, ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவந்தார். செட்டின் கடைசியில் மோனிஃபில்ஸ் செய்த இரட்டை தவறுகளால் அந்த செட் நடால் வசமானது. அடுத்த செட்டில் தனது இரண்டாவது பாயிண்டை பறிகொடுத்த நடால் மோனிஃபில்ஸின் ஜம்ப் ஷாட்களால் அந்த செட்டை இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் மிகவும் பரபரப்பான சூழலில் துவங்கியதும், நடால் தனது வழக்கமான ஆட்டத்தை தொடங்கினார். பந்து கீழே பட்டு ஸ்பின் ஆகும்வகையில் நடால் அடித்த ஸ்லைஸ் ஷாட்களால் மோனிஃபில்ஸை அடித்து நொறுக்கினார் நடால். மோனிஃபில்ஸின் இரட்டை தவறுகளால் கடைசி செட்டில் ஒரு பாயிண்ட் கூட எடுக்காமல் 6-0 என்ற நேர்செட்டில் ஆட்டம் நடாலின் வசமானது. நடாலுக்கு இந்த ஆட்டம் மிக முக்கியமானது. 28 மாஸ்டர் டைட்டில்களை வென்று சாதனை படைத்திருந்த நோவாக் ஜோகோவிச்சின் சாதனையை, இந்த வெற்றியின் மூலம் சமன் செய்திருக்கிறார் நடால். மாஸ்டர்ஸ், க்ராண்ட் ஸ்லாம் என 68 டைட்டில்களை வென்றுள்ள நடால், இதுவரை 100 ஃபைனல் போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்த வருடம் மிக சிறப்பாக தொடங்கியிருக்கிறது. கடந்த வருடம் சரியாக விளையாடாத நான், இந்த வருடம் சிறந்த முறையில் தயாராகியிருக்கிறேன். அதற்கு சுவாரஸ்யமாக அமைந்த, இந்த இறுதிப் போட்டியே சான்று’ என்று வெற்றிக்களிப்பில் பேசியிருக்கிறார் நடால். மோனிஃபில்ஸில் அதிரடியான ஆட்டம் அடுத்து நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸிலும் அவர் ஜொலிக்கப் போவதை உறுதி செய்திருக்கிறது.

-சிவா�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *