உலகம் முழுவதிலும் கவனம் பெற்ற தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன்.
லிடியனுக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, மாதவன் உள்ளிட்ட திரைத்துறையைச் சார்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்று மாலை சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் லிடியன் நாதஸ்வரத்துடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ரஹ்மான், “லிடியன் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பியானோ மாஸ்ட்ரோவாக உருவாக வேண்டும். நம் நாட்டில் அது இல்லை, இது இல்லை என்ற புகார்கள் இருப்பினும் ஒவ்வொரு மனிதனாலும் புதிய விஷயங்களை உருவாக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இசையில் லிடியனைப் போல் கலை, சினிமா, அரசியல், அறிவியல் ஆகிய துறைகளிலும் இது நடைபெறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட ‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.
ஆரம்பம் முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலை தொடர்ந்து பெற்று வந்த இவர் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்து பட்டத்தை வென்ற லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
�,