சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்: கிராம மக்கள் மறியல்!

Published On:

| By admin

தஞ்சை மாவட்டம், விக்கிரவாண்டி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் நெடுஞ்சாலை பணிகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வையச்சேரி, சூலமங்களம் ஊராட்சி பகுதியில் தஞ்சை – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வையச்சேரி பகுதியில் உள்ள கிராம சாலைக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுநாள் வரை சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை வையச்சேரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமையில் வையச்சேரி, சூலமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சர்வீஸ் சாலை அமைக்க மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், கிராம நிர்வாக அதிகாரி ரவிக்குமார் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தப் பிரச்சினைக்கு நாளை (ஏப்ரல் 7) பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக விக்கிரவாண்டி- தஞ்சை நெடுஞ்சாலை பணிகள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

**ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share