சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவாரா மசூத் அசார்?

Published On:

| By Balaji

ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பிப்ரவரி 14ஆம் தேதி தற்கொலைப் படைத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட அச்சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் மசூத் அசார். இச்சம்பவத்துக்குப் பிறகு மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஃபிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிப்ரவரி 27ஆம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், 10 வேலை நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது. இந்திய நேரப்படி காலை 12.30 மணியோடு முடிகிறது.

நேற்று வரையில் யாரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இருப்பினும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க சீனாதான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறது. அதனால் இவ்விவகாரத்தில் சீனாவின் மீதுதான் உலக நாடுகளின் பார்வை உள்ளது. கடைசி நேரத்தில் சீனா இதற்கு ஆட்சேபனை எதிர்ப்பு தெரிவித்துள்ளதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அல்கொய்தா தடைக்குழு விதிகளின்படி, இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக விரைவில் அறிவிக்கப்படுவார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share