சர்ச்சைக்குரிய உள்ளடக்கம் கொண்ட பதிவுகளை பேஸ்புக்கில் இருந்து நீக்கவோ அல்லது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதையோ தடை செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிடலாம் என்று ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வெறுப்பு மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு உத்தரவிட ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தில் தடை இல்லை எனவும் ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தீர்ப்பு நீதிமன்றம் பிறப்பிக்கிற உத்தரவுகளுக்கு உட்பட்டது என்றும், பதிவுகளின் உள்ளடக்கம் தொடர்பாக பயனாளிகள் அளிக்கிற புகார்களுக்குப் பொருந்தாது என்றும் ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பெண் அரசியல் பிரமுகர் எவா கிளாவிஷிங் பயஷஜிக், அவதூறு பரப்பும் விதத்திலான பதிவுகளை அழிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது..
ஆனால், இந்தத் தீர்ப்பை ஃபேஸ்புக் விமர்சித்துள்ளது. எந்தவொரு நாட்டிலும் பதிவுகளைக் கண்காணித்து, விளக்கி, சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது சமூக வலைதளங்களின் பணி அல்ல என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது. ஒரு நாடு தனது சட்டங்களை மற்றொரு நாட்டின் மீது திணிக்க இயலாது என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருவதாகவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது. மேலும், தேசிய நீதிமன்றங்கள் இந்த ஆணையை விதிக்கும்போது தெளிவான வரையறைகள் வகுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில் உரிய விதிகளை வகுக்க வேண்டும்” எனவும் ஃபேஸ்புக் கூறியுள்ளது.
ஃபேஸ்புக் நிர்வாக இயக்குநர் தாமஸ் ஹியூஜ்ஸ் இந்தத் தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “இணையப் பயன்பாட்டாளர்கள் மற்றொரு நாட்டு பயனர்களின் பதிவுகளை எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கும் மிக ஆபத்தான சட்டம் இது. இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய தகவல்களை சமூக இணையதளங்களிலிருந்து எளிதில் நீக்கிவிட முடியாது என்ற நிலையில் ஐரோப்பிய யூனியன் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.�,”