அதிமுகவில் என்ன நடக்கிறது? மினி தொடர் -17
ஆரா
அதிமுக பாஜகவோடு போகிறதா, பாஜக அல்லாமல் தனி அணி காணப் போகிறதா என்பதெல்லாம் தேர்தல் நேரத்து திருவிழா மத்தாப்பு. ஆனால் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய வட்டாரத்துக்குள் வெடித்துக் கொண்டிருப்பது ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானால் கேட்கப்படும் கேள்விகள் பற்றித்தான்.
ஒருமுறை, இருமுறை, மும்முறை என்று போய் இப்போது பிப்ரவரி 19 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர் ஆஜராகவேண்டும் என்று சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இம்முறையும் அவர் ஆணையத்தில் ஆஜர் ஆவாரா அல்லது ஏதேனும் நிர்வாகக் காரணங்கள் நந்தியாக இருப்பதைச் சொல்லி தள்ளிப் போடுவாரா என்பதுதான் அதிமுக தாண்டியும் இப்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேகவேகமாக முனைந்த ஆறுமுகசாமி ஆணையம், இப்போது மேலும் நான்கு கால அவகாசம் கேட்டிருக்கிறது.
ஓ.பன்னீர் செல்வம் உண்மையிலேயே ஜெயலலிதாவின்மரண மர்மத்தை உடைக்க சபதம் எடுத்திருந்தால், ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களுக்குள் தானாகவே முன்வந்து ஆஜராகி, ‘இன்னின்னார் மீது சந்தேகம் இருக்கிறது. அவர்களை விசாரிக்க வேண்டும்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
ஜெயலலிதா இறந்த பின் அவரது புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வது தவறில்லை. ஆனால் அவரது சவப்பெட்டியை வைத்து அரசியல் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம். இப்படிப்பட்ட நிலையில் அவரது கோரிக்கைக்காகவே அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் உரிய நேரத்தில் ஆஜர் ஆகியிருந்தால் இந்நேரம் ஜெ. மரண மர்மம் உடைந்திருக்கும். யார் காரணம் என்று அப்பாவி அதிமுக தொண்டர்கள் தெரிந்துகொண்டிருப்பார்கள். அதிமுகவில் நிகழும் குழப்பங்கள் எல்லாம் தெளிந்து ஒரு தீர்வுக்கு வந்திருக்கும்.
ஆனால் ஓ.பன்னீர் ஏன் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை? அழைத்தும் ஓரிரு முறை ஆஜராகவில்லை.
இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் பேசியபோது முக்கியமான ஓர் ஒப்பீட்டை நம் முன் வைத்தார்கள்.
“திமுக தலைவர் கருணாநிதி மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக 1976 பிப்ரவரி 3 ஆம் தேதி எம்.ஜி.ஆரின் வற்புறுத்தலால் இந்திரா காந்தி அமைத்த விசாரணை ஆணையம்தான் சர்க்காரியா ஆணையம். எமர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் எம்ஜிஆரின் கோரிக்கையை ஏற்று தன் அரசியல் நோக்கத்துக்காக 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அமைத்த ஆணையம்.
குடியரசுத் தலைவரிடம் கருணாநிதி மீது பக்கம் பக்கமாக 1972 ஆம் ஆண்டு புகார்களை அடுக்கினார் எம்.ஜி.ஆர். அதன் மீதுதான் 1976 ஆம் ஆண்டு சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் என்ன வேடிக்கை என்றால் கருணாநிதி மீதான புகார்கள் பற்றி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு எம்.ஜி.ஆருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சர்க்காரியா ஆணையம் பல முறை அழைப்பு விடுத்தும் எம்.ஜிஆர் கடைசி வரை ஆஜராகவே இல்லை. எழுத்து ரீதியாக சில தகவல்களை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தாரே தவிர நேரடியாக எம்.ஜி.ஆர். சர்க்காரியா ஆணையம் முன் ஆஜராகவில்லை.
இதேபோலத்தான் இப்போது ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையால் அமைக்கப்பட்டும், எம்.ஜி.ஆர். வழியிலேயே ஓ.பன்னீரும் ஆணையத்தின் முன் ஆஜராகவில்லை. ஒருவேளை எம்.ஜி.ஆர் சர்க்காரியா ஆணையத்திடம் செய்தது போலவே எழுத்துபூர்வமான சில விளக்கங்களை ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்ய ஓ.பன்னீர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
எம்ஜிஆருக்கு இந்த வழிமுறை வசதியாக இருந்தது. ஆனால் ஓ.பன்னீருக்கு இம்முறை அப்படி இருக்காது என்றும் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது தெரிந்தது.
ஏன் தெரியுமா?
சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டபோது அதில் திமுக தலைவர் கருணாநிதி மீது புகார் சொல்பவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் சார்பில் முறையீடு வைக்கப்பட்டது. அண்ணா நடத்திய ஹோம் ரூல் ஆங்கில பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்த மூத்த வழக்கறிஞர் எம்.எஸ். வெங்கடாசலம் தான் திமுக சார்பில் ஆணையத்தில் இந்த கோரிக்கையை வைத்தார். ஆனால் சர்க்காரியா ஆணையமோ கருணாநிதி தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி இல்லை என்று மறுத்துவிட்டது. அது எம்ஜிஆருக்கு வசதியாக இருந்தது.
ஆனால் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்படி இல்லை. ஆணையம் அழைக்கும் ஒவ்வொருவரையும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை என்ற வகையில் கேள்விகளால் குடைந்து எடுக்கிறார்.
“ஒருவேளை ஆணையத்தின் சார்பில் ஓ.பன்னீர் செல்வம் அழைக்கப்படாமல் போனால் கூட எங்கள் தரப்பில் சாட்சியாக நாங்கள் அவரை அழைப்போம். திரு. ஓ.பன்னீரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஓ.பன்னீர்செல்வத்தைக் குறுக்கு விசாரணை செய்தாலே அனைத்து முடிச்சுகளும் அவிழும்” என்று கூறுகிறார் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.
சர்க்காரியா ஆணையத்தில் எம்ஜிஆர் கடைபிடித்த நுட்பத்தை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர் கடைபிடிக்க முனைந்தாலும் சசிகலா தரப்பில் சாட்சியாக அழைக்கப்பட்டால் ஓபிஎஸ் கண்டிப்பாக ஆஜராகியே தீர வேண்டும் என்பதே நிலைமை.
(பயணிப்போம்)
�,”