சர்க்கரைக்கு செஸ் வரி விதிப்பதற்கான தேவை இல்லை என்று ஜிஎஸ்டி அமைச்சரவைக் குழு கருதுகிறது.
கரும்பு விவசாயிகள் சந்தித்துவரும் நெருக்கடியைப் போக்குவதற்காக சர்க்கரைக்கு செஸ் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அமைச்சரவைக் குழுவையும் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது. சர்க்கரைக்கு செஸ் வரி விதிப்பதற்கான முன்மொழிதல், விவசாயிகளுக்குச் சாதகமான பலன்களை அளிக்காது என்று ஜிஎஸ்டி அமைச்சரவைக் குழு கருதுகிறது. மேலும், எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரியை 18 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாகக் குறைக்கவும் இக்குழு அறிவுறுத்துகிறது.
சர்க்கரைக்குத் தனியாக செஸ் வரி விதிப்பது சட்டரீதியாகச் சாத்தியமா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு முன்பு, அட்டர்னி ஜெனரலின் கருத்துகளை அமைச்சரவைக் குழு கேட்கவுள்ளது. இதுகுறித்த அறிக்கை ஜூலை 21ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த அமைச்சரவைக் குழுவில் உத்தரப் பிரதேச நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால், மகாராஷ்டிர நிதியமைச்சர் சுதிர் முங்கதிவார், கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதியன்று, இந்த அமைச்சரவைக் குழுவின் தலைவரும், அசாம் மாநில நிதியமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போதைய நிலையில், சர்க்கரைக்கு செஸ் வரி விதிப்பதற்கான தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை” என்று கூறினார்.�,