~சர்கார் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Published On:

| By Balaji

சர்கார் பட சர்ச்சையின்போது, விஜய் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு வாட்ஸ்அப் வீடியோ மூலம் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளது சென்னை மத்திய குற்றப் பிரிவு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்கார். இத்திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால், சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடம்பூர் ராஜூ, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்யை விமர்சித்தனர். மாநிலம் முழுவதுமுள்ள பல தியேட்டர்களில் இருந்த கட் அவுட்கள், பேனர்கள் அதிமுக தொண்டர்களால் கிழித்து எறியப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு இரண்டு இளைஞர்கள் கையில் அரிவாளுடன் பேசிய வீடியோவொன்று வாட்ஸ்அப்பில் வெளியானது. அதில், அதிமுக அரசையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தனர் அந்த இளைஞர்கள். தமிழக அரசை வசை பாடியதோடு, அமைச்சர்களுக்கு மிரட்டலும் விடுத்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த வீடியோவில் இடம்பெற்ற இரண்டு வாலிபர்கள் மீதும், இன்று (நவம்பர் 12) பிரகாஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரையும் கைது செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

மிரட்டல் விடுத்துள்ள நபர்கள் குறித்து பொதுமக்களுக்குத் தகவல் தெரிந்தால், சென்னை மத்திய குற்றப் பிரிவில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நபர்களைப் பற்றி விவரம் தெரிந்தவர்கள் 044 – 23452348 மற்றும் 044 – 23452350 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel