தமிழகத்தில், 31,173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தால், குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்றும், ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்றும், தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தால் தான் கெளரவம் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளிலேயே குழந்தைகளை சேர்க்கின்றனர். தன் விளைவாக வீதிக்கு ஒரு தனியார் பள்ளி முளைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி உள்ளிட்டவை தரமாக இல்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மாணவர்கள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயிலுவதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை, மடிக்கணினி, சைக்கிள்,பள்ளி சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள்,புத்தகப் பைகள்,கணித உபகரணப் பெட்டி, வரைபடம், மதிய உணவு, காலணிகள் மற்றும் பேருந்து பயண அட்டைகள் போன்ற பல்வேறு உதவிகளைத் தமிழக அரசு செய்து வருகிறது. எனினும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
இதனால், கடந்த மே மாதம் தொடக்கப் பள்ளிகளில் 10 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலும், பள்ளியை மூடாமல் இருக்க 3 ஆண்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் மட்டுமே பள்ளிகள் மூடப்படும் என தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சரஸ்வதி பூஜையின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக, அரசுப் பள்ளிகளில், செப்டம்பர் மாதம் இறுதி வரை ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் ஆட்டோ மூலம் பிரசாரம், விழிப்புணர்வு பேரணி நடத்தி கல்வித் துறை ஊக்குவித்து வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் உட்பட வசதிகள், ஆசிரியர்களின் திறமை, ஆங்கில வழி போதனை போன்றவற்றை, ஒலி பெருக்கி மூலம் அறிவித்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள், சரஸ்வதி பூஜை சமயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்தால் அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பார்கள் என பெரும்பாலான பெற்றோர் நம்புகின்றனர். இதனால், சரஸ்வதி புஜையின் போது பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் ’ எனத் தெரிவித்துள்ளனர்.�,