பிரபல உணவகமான சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 16) உத்தரவிட்டுள்ளது.
ஜீவஜோதி என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொள்ள, அவரது கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்த குற்றத்திற்காக ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் ஜூலை 9ஆம் தேதி சென்னை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். உடல்நலக் குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அவருக்கு சுவாசக் கோளாறு இருப்பதாகவும், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், சிறுநீரகங்கள் செயல் இழந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ராஜகோபால் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரது மகன் சரவணன், “இம்மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனையில் சேர்த்து ராஜகோபாலுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜகோபாலுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை தொடர்பான அறிக்கையைக் கேட்டிருந்தது.
இன்று, மனு விசாரணைக்கு வந்த போது, ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிகிச்சைக்கான செலவை அவரது மகன் சரவணன் ஏற்பதாகத் தெரிவித்ததை அடுத்து, போலீஸ் பாதுகாப்பு, சிறைத் துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ராஜகோபால் மிகவும் கவலைக் கிடமாக இருப்பதால் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது மிகவும் சிக்கலானது என்று ஸ்டான்லி மருத்துவமனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”