சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு: இன்று தீர்ப்பு!

Published On:

| By Balaji

2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. ஹரியானா மாநிலத்தின் பானிபட் கிராமம் வழியாக அட்டாரி நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்திய எல்லையில் இந்த ரயில் கடந்து செல்லும் கடைசி நிலையம் அட்டாரியாகும். இந்த கொடூர சம்பவத்தால் 68 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அதிகமானவர்கள் பாகிஸ்தானியர்கள். ரயிலின் மற்ற பெட்டிகளிலிருந்து வெடிக்காத 2 சூட்கேஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு நிறுவன (என்.ஐ.ஏ.) நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாகிஸ்தான் முஸ்லிம்களைக் குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாக என்ஐஏ 2011ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அபினவ் பாரத் என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த லோகேஷ் ஷர்மா, சுனில் ஜோஷி, சந்தீப் தாங்கே, ராமசந்திர காலசங்கரா மற்றும் சாமியார் அசீமானந்தா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகளை தப்பிக்கவைக்க அரசியல் தலையீடுகள் இருப்பதாக, இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இவ்வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில் தற்போது சிறையில் இருக்கும் லோகேஷ் ஷர்மா, கமல் சவுகான், ராஜிந்தர் சவுதரி மற்றும் பிணையில் வெளிவந்திருக்கும் சாமியார் அசீமானந்தா அகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share