சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்போம் என அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து, அந்த மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை, வரும் ஜனவரி 22ஆம் தேதி விசாரிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று முன்தினம் தெரிவித்தது. இன்று, திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ், பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், இந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செப்டம்பர் 28ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளதாகத் தெரிவித்தார். அதில், “அனைத்துப் பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்குமாறு அளித்த தீர்ப்பை எதிர்த்து, அரசால் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. நாங்கள் பக்தர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதேசமயத்தில், தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதனால், சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இன்று மாலை 4 மணிக்கு பந்தளம் அரண்மனை பிரதிநிதிகளுடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
**எதிர்ப்பு**
காங்கிரஸை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்களின் விசாரணை நடைபெறும் வரை பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் செல்வதை கேரள அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
“இந்த கூட்டத்தினால் மகிழ்ச்சி இல்லை. அரசு அதனுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. சமரசத்திற்குத் தயாராக இல்லை. சபரிமலையில் சமாதானத்தை நிலைநாட்ட, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. கூட்டத்தில் அவரது நிலைப்பாட்டை விட்டு மாறுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்பதால், நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டோம்” என்று கூறினார்.�,