சபரிமலை சர்ச்சை: பிரச்சாரம் செய்தால் தகுதிநீக்கம்!

Published On:

| By Balaji

தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தைப் பயன்படுத்தினால், வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப் பரிந்துரை செய்யப்படுவார் என கேரள மாநிலத் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி டி.ஆர்.மீனா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று (மார்ச் 10) வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, கேரள மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது, இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (மார்ச் 11) கேரள மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி டி.ஆர்.மீனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “சபரிமலை விவகாரம் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் மத உணர்வுகளைத் தூண்டுவதற்காக, குறிப்பாக இந்துக்களின் மத உணர்வுகளைத் தூண்டப் பயன்படுத்தபடுவதை அனுமதிக்க முடியாது இது ஒரு மத பரிமாணத்தை ஏற்படுத்தக் கூடாது. ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது மதக் குழுவுக்கு விரோதமாக அல்லது அரசியல் கட்சிக்கு விரோதமாக இந்த விவகாரம் பயன்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தார்.

சபரிமலை விவகாரம் தேர்தல் ஆயுதமாக மாறிவிடக் கூடாது என்றார் டி.ஆர்.மீனா. “மத வெறுப்புகளைத் தூண்டுவது அல்லது இந்துகளுக்கு ஆதரவான அல்லது எதிரான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்க நேரிடும். இந்துக்களுக்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயல்படுகிறேன் எனக் கூறி குறிப்பிட்ட கட்சி வாக்கு சேகரிக்குமானால், அவர்களின் வேட்பாளர் தகுதியை ரத்து செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவாகும். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறையிடம் கூறுவோம். இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்வோம்” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் நாளை(மார்ச் 12) ஆலோசனை நடத்தப்படும் என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் டி.ஆர்.மீனா.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share