சபரிமலையில் அவமதிப்பு: கன்னியாகுமரியில் போராட்டம்!

Published On:

| By Balaji

சபரிமலை சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைக் கேரள போலீசார் அவமதித்ததாகக் கூறி, இன்று (நவம்பர் 22) பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று (நவம்பர் 21) நிலக்கல் பகுதியிலிருந்து பம்பைக்கு வாகனத்தில் சென்றார். அப்போது, தனியார் வாகனங்களை அனுமதிப்பதில்லை எனக் கூறி காவல் துறை கண்காணிப்பாளர் யதீஷ் சந்திரா அவரது வாகனத்தைத் தடுத்து நிறுத்தினார்.

கடும் வாக்குவாதத்தை அடுத்து, கேரள அரசுப் பேருந்திலேயே பம்பை வரை சென்றார் பொன்.ராதாகிருஷ்ணன். பின்பு சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தபோதும், அவரது வாகனத்தை நிறுத்தி போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு, அவரிடம் மன்னிப்பு கேட்டு கேரள போலீசார் கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கேரள போலீசார் மத்திய அமைச்சரை அவமதித்ததாகக் கூறி பாஜகவினர் கன்னியாகுமரியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தக்கலை, களியக்காவிளை பகுதியில் பாஜகவினர் கேரள அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித்துப் போராட்டம் நடத்தினர். இதனால், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது, 12 மணிக்கு பிறகு, கேரளா மற்றும் தமிழக பேருந்துகள் இயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

**திருப்பி அனுப்புதல்**

நேற்றிரவு ஹைதராபாத்தில் இருந்து வந்த சுமார் 150 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள், வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அந்த பக்தர்கள் சபரிமலைக்குச் செல்லாமல் தமிழக -கேரள எல்லைப்பகுதியில் உள்ள ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் தங்கி, அங்கேயே தங்களுடைய விரதத்தை முடித்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு மேல் ஐயப்பன் கோயிலில் பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என கேரள காவல் துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share