‘தேர்தல் ஆணையத்தில் தீபா அணியினர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் கோயம்பேடு சந்தையிலிருந்து வாங்கியதா?’ என்று தினகரன் ஆதரவு அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, தன்னுடைய ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’யின் பெயரை, ‘அதிமுக ஜெ.தீபா அணி’ என்று மாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தீபா பேரவை சார்பில் அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறி 52,000 பக்கப் பிரமாணப் பத்திரங்களைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் சென்னை பெசன்ட் நகரிலுள்ள தினகரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளரும், தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத், “தீபாவுக்கு அவரது கணவர் மாதவனின் ஆதரவே இல்லை. பிறகு எப்படி அவருக்குத் தொண்டர்களின் ஆதரவு இருக்கும்? அவர் புதிதாக ஜெ.தீபா அணி என்று பெயரை மாற்றியுள்ளார். அது ஜெ.தீபா அணி அல்ல; அது ஒரு பிணி. அவர் பிரதமரைச் சந்திப்பதால் எங்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை. தீபா நிராகரிக்கப்பட வேண்டியவர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “தீபா அணியினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் என்ன கோயம்பேடு மார்கெட்டிலிருந்து வாங்கி வந்ததா?” என்றும் கேள்வி எழுப்பினார்.�,