தெலங்கானா இடைக்கால முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் மீது 64 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை சந்திரசேகர ராவ் நேற்று தாக்கல் செய்தார். தன்னிடம் ரொக்கமாக ரூ.2.4 லட்சமும் வங்கியில் ரூ. 5 கோடியே 63 லட்சமும் உள்ளதாக வேட்புமனுவில் சந்திரசேகர ராவ் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவியிடம் ரூ. 93,595 உள்ளதாகவும், தெலங்கானா ப்ராட்காஸ்டிங் ப்ரைவேட் லிமிடெடில் ரூ. 55 லட்சமும் தெலங்கானா ப்ப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் ரூ.4 கோடியே 16 லட்சமும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன் மீது 64 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சந்திரசேகர ராவ் குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா கிளர்ச்சியின்போது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதுவரை சம்மன்கள் வழங்கப்படாததால், வழக்கு எண் மற்றும் நீதிமன்றம் குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு தனது சொத்து மதிப்பு ரூ.15.95 கோடி என அவர் குறிப்பிட்டிருந்த நிலையில், இம்முறை அது ரூ.22.61 கோடியாக உயர்ந்துள்ளது.
**தேர்தல் ஆணையம் நோட்டீஸ்**
இதற்கிடையே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு மற்றும் மெகா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அநாகரீகமாகப் பேசியதற்காக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டி.ஆர்.எஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரி, 48 மணி நேரத்திற்குள் பதிலளிக்கும்படி தெரிவித்துள்ளார். அதற்குள் பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.�,