துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் முக்கிய சதிகாரர்களில் பாஜக தலைவர் அமித் ஷாவும் ஒருவர் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் சொராபுதீன் ஷேக். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக இவர் மீது குற்றம் சாட்டிய குஜராத் போலீசார், 2005ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தனது மனைவியுடன் ஐதராபாத்தில் இருந்து மகாராஷ்டிரா வந்துகொண்டிருந்த அவரை கைது செய்தனர். மூன்று நாட்கள் கழித்து சொராபுதீன், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அடுத்த சில நாட்களின் அவரது மனைவியும் கொல்லப்பட்டார்.
சொராபுதீன் கொலையை பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டில் ஒரு ஆண்டு கழித்து போலீசாரால் கொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் தங்கள் காவலில் இருந்து தப்பியோட முயன்றபோது அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
துளசிராம் பிரஜாபதியின் மரணம் தொடர்பான வழக்கை கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து விசாரித்தவரான விசாரணை அதிகாரி சந்தீப் தம்காட்கே மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 21ஆம் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது, இந்த விவகாரத்தில் குற்றவாளிகள்- அரசியல்வாதிகள் – போலீஸ் கூட்டு இருந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அமித் ஷா மற்றும் குலாப்சந்த் கட்டாரியா (ராஜஸ்தானின் உள்துறை அமைச்சர்) ஆகியோர் சொராபுதீன், துளசிராம் மற்றும் ஆசம் கான் ஆகியோரை குற்றவாளிகளாக பயன்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
**துளசிராம்**
“நாங்கள் நடத்திய விசாரணையில், அமித் ஷா, டிஜி வன்சாரா (குஜராத் முன்னாள் டிஐஜி), ராஜ்குமார் பாண்டியன் (புலனாய்வு அமைப்பு) மற்றும் எம்.என். தினேஷ்(ராஜஸ்தான் ஐபிஎஸ் அதிகாரி) ஆகியோர் முதன்மை சதிகாரர்கள் என்பது தெரியவந்தது” என நீதிமன்றத்தில் சந்தீப் கூறியுள்ளார்.
துளசிராம் போலி என்கவுன்டர் வழக்கில் ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு அமித் ஷா கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என 2014ல் சிபிஐ நீதிபதி எம்.பி. கோசவி அமித் ஷாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.
சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா ரூ. 70 லட்சம் லஞ்சம் பெற்றதாக அந்த வழக்கை விசாரித்த வந்த அதிகாரி அமிதாப் தாக்கூர் கடந்த 19ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார். தற்போது கொலை சதியிலும் அமித் ஷா ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று (நவம்பர் 22) தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்தியத்திடம் இருந்து தப்பித்துவிட முடியாது என்று கீதை கூறுகிறது. தனது வாக்குமூலத்தில், அமித் ஷா முக்கிய சதிகாரர் என்று சந்தீப் தம்காட்கே கூறியுள்ளார். அப்படிப்பட்டவரைத் தலைவராக கொண்டுள்ளது பாஜகவுக்கு முற்றிலும் பொருத்தமானதுதான்” என்று பதிவிட்டுள்ளார்.
�,”