சண்டே சக்சஸ் ஸ்டோரி: ஸ்ரீதர் வேம்பு (ஜோஹோ கார்ப்பரேசன்)

Published On:

| By Balaji

பிரகாசு

மென்பொருள் சேவைகள் துறையில் கூகுள், மைக்ரோசாஃப்ட் என சர்வதேச நிறுவனங்களுக்குப் போட்டியை உருவாக்கி பில்லியனில் வருவாய் ஈட்டும் தமிழ்நாட்டின் ஜோஹோ கார்ப்பரேசன் நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு குறித்து இந்தவார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

மென்பொருள் சேவையைப் பொறுத்தவரையில் எப்போதுமே நம் நினைவுக்கு வருகிறது கூகுள், மைக்ரோசாஃப்ட், ஒரேக்கில் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள்தான். ஆனால் அந்த நிறுவனங்களுக்கே சில காலமாகப் போட்டியை உருவாக்கி வருகிறது காஞ்சிபுரத்திலிருந்து உருவான ஜோஹோ கார்ப்பரேசன். சுமார் 2 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது இந்நிறுவனம். இதுதான் கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இந்நிறுவனத்தைப் போட்டியாக கருதுவதற்கு முக்கியக் காரணமாகவுள்ளது.

ஸ்ரீதர் வேம்பு சென்னையில் உள்ள ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராவார். தனது பள்ளிக் கல்வியை அரசு உதவிபெறும் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை ஐஐடியிலும் படித்தவர். இவருடைய குடும்பத்தில் இவர்தான் முதன்முதலில் கல்லூரிக்கு சென்றவர். இவருடைய அப்பா நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராகப் பணிபுரிந்தார். சென்னை ஐஐடியில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஆய்வுப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஃபிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1989ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் இவருக்கு அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இது அவருக்குப் புத்தகங்களின் மீதான வாசிப்பை அதிகரித்தது.

முனைவர் படிப்பை முடித்த பிறகு 1994ஆம் ஆண்டு இவர் கலிஃபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள குவால்கம் நிறுவனத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அரசியல் மீதான ஆர்வத்தில் கிடைத்த வாசிப்பு, இந்தியாவில் சோசலிஷம் என்பதுதான் முக்கியப் பிரச்னையாக உள்ளது என்பதை இவருக்கு உணர்த்தியது. அந்த சமயத்தில் இந்தியா திரும்பி, தனது சகோதாரர் குமாருடன் இணைந்து தொழில் முனைவில் ஈடுபட விரும்பினார். இதையடுத்து 1996ஆம் ஆண்டில் சென்னையின் புறநகரிலிருந்து ஒரு வேம்பு சாஃப்ட்வேர் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தனது சகோதரருடன் இணைந்து தொடங்கினார். ஒரு சிறிய அபார்ட்மென்ட்டிலிருந்து இந்த நிறுவனம் செயல்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் புதிதான இத்துறையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டது வேம்பு சாஃப்ட்வேர். இவர்களுடன் டோனி நெட்வொர்க் மேனேஜ்மென்ட் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்ற டோனி தாமசும் இணைந்திருந்தார். தொடக்கத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், மென்பொருள் சேவை வடிவமைத்துக் கொடுப்பதற்கும் முக்கியத்துவம் அளித்தனர். இதனால் சில காலத்திலேயே அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களும், ஜப்பான் நிறுவனங்களும் இவர்களுக்கு வாடிக்கையாளர்களாக உருவானார்கள்.

2000ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 115 பொறியாளர்களுக்கும், அமெரிக்காவில் 7 பேருக்கும் மென்பொருள் வடிவமைத்துக் கொடுக்குமளவுக்கு இந்நிறுவனம் உருவெடுத்தது. அப்போதே இந்நிறுவனம் மில்லியன் டாலர்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அளவுக்குத் திகழ்ந்தது. 2005ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அட்வென்ட்நெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சர்வதேச அளவில் மென்பொருள் சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருந்தாலும் இந்நிறுவனம் அந்த நெருக்கடிகளை தனக்கு சாதகமானதாக மாற்றி வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், சொந்தமாகப் பல்கலைக் கழகம் ஒன்றையும் இந்நிறுவனம் தொடங்கியது. இந்தப் பல்கலைக் கழகத்திற்கு ஜோஹோ என்று பெயரிடப்பட்டது.

மீண்டும் 2009ஆம் ஆண்டில் அட்வென்ட்நெட் நிறுவனம் ஜோஹோ கார்ப்பரேசன் எனப் பெயர் மாற்றம் கண்டது. அதன்பிறகுதான் இந்நிறுவனம் மின்னல் வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்நிறுவனத்தின் விற்பனை மிக வேகமாக அதிகரித்தது. 2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1.2 கோடியாக அதிகரித்தது. அந்த ஆண்டில் 30 கோடி டாலர் வருவாய் ஈட்டுமளவுக்கு ஜோஹோ வளர்ச்சி கண்டது. அடுத்த ஆண்டிலேயே இந்நிறுவனத்தின் வருவாய் 50 கோடி டாலராக அதிகரித்தது. தற்போது இந்நிறுவனத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் மட்டுமின்றி மேற்கு ஆசிய நாடுகள், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவிலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் பில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் வெற்றிகர நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் முளைத்துள்ளன. சுமார் 5000 பேர் உலகம் முழுக்கப் பணிபுரிகின்றனர். தற்போது கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

இன்று ஜோஹோ மெயில், டாக்ஸ், சி.ஆர்.எம்., சேல்ஸ் ஐ.கியூ., புக்ஸ், புராஜெக்ட்ஸ், ஃப்ளோ, வெப் என்.எம்.எஸ்., மேனேஜ் என்ஜின் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு இந்தியாவும் இந்நிறுவனத்தின் முக்கியச் சந்தைகளில் ஒன்றாக உருவாகியுள்ளது. இந்நிறுவனத்துக்கு தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இரண்டு டேட்டா சென்டர்கள் உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இந்நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக உருவாகும் என்று இந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இரண்டு டேட்டா சென்டர்களை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று சென்னையில் அமையவுள்ளது.

இந்நிறுவனத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தும் ஸ்ரீதர் அதற்கெல்லாம் பிடி கொடுக்கவே இல்லை. மேலும், இன்றுவரை சொந்த முதலீட்டுடன் மட்டுமே இயங்குவது இந்நிறுவனத்தின் தனிச் சிறப்பு. பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு கட்டத்திற்குப் பிறகு பங்குதாரர்களை இணைத்துக் கொள்ளும். ஆனால் ஸ்ரீதர் அதற்கான வாய்ப்பை எந்த நிறுவனத்திற்கும் அளிக்கவில்லை. 1990ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இன்று பில்லியன்களில் வெற்றிகரமாக வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருவாகியுள்ளது. மென்பொருள் சேவை என்றாலே கூகுள், மைக்ரோசாஃப்ட் என்றிருந்த பெயர் பட்டியலில் இந்தியாவின் ஜோஹோ கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்துள்ளது.

தகவல்கள்:

[யுவர் ஸ்டோரி](https://tamil.yourstory.com/read/a2300be450/billion-dollar-investments-in-building-organizations-refused-cuyamutalit-sridhar-margo-)

[தமிழ் குட் ரிட்டன்ஸ்](https://tamil.goodreturns.in/news/2017/05/02/sridhar-vembu-founder-ceo-zoho-corporation-007719.html)

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

**சென்றவார சண்டே சக்சஸ் ஸ்டோரி**: [எம்.பி.ராமச்சந்திரன் (உஜாலா)](https://minnambalam.com/k/2018/03/18/20)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share