(நேச்சுரல்ஸ் சலூன்)
அழகு நிலையத் துறையில் இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்தும் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சி.கே.குமாரவேல் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.
சி.கே.குமாரவேல் கடலூரைச் சேர்ந்தவர். கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் படித்துள்ளார். குமாரவேலின் குடும்பம் தொடக்கம் முதலே தொழில் குடும்பம்தான். இவருடைய தந்தை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். மருந்துப் பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். ஒருமுறை அவர் சிங்கப்பூர் சென்றபோது எடுத்துச் சென்ற ஷாம்பூ பாட்டில் உடைந்து சட்டையில் கொட்டிவிட்டது. இதனால் ஷாம்பூவைப் பாட்டில்களில் அல்லாமல் சிறு பாக்கெட்டுகளில் விற்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உதித்துள்ளது.
தொழில்முனைவு என்பது பணத்தின் அடிப்படையில் இல்லை, தேவையின் அடிப்படையில்தான் என்று தனது தந்தையிடமிருந்து குமாரவேல் கற்றுக்கொண்டார். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த சகோதரர்களுடன் இணைந்து தந்தையின் தொழிலையே பார்த்து வந்தார் குமாரவேல். இவருடைய தந்தை வெல்வெட் ஷாம்பூ நிறுவனத்தை 1991ஆம் ஆண்டில் தொடங்கினர். சொந்தக் குடும்பத்தின் நிறுவனமாக இருந்தாலும், தன்னுடைய உழைப்பும், திறமையும் இந்த நிறுவனத்துக்குப் பயன்படுத்தப்படாததைப் போல இவர் உணர்ந்துள்ளார். நிறுவனத்தை விரிவுபடுத்தவும், முன்னேற்றவும் பல்வேறு யோசனைகளை அவ்வப்போது வழங்கியுள்ளார். ஆனால் இவருடைய யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, 2000ஆம் ஆண்டில் இவரே நேச்சுரல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். தனது மனைவியை ஊக்கப்படுத்தும் விதமாகச் சிறு முதலீட்டில்தான் நேச்சுரல்ஸ் நிறுவனத்தை இவர் தொடங்கினார். இன்று பல ஆயிரம் பெண்களுக்கு இந்நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. நூற்றுக்கணக்கானோரை தொழில்முனைவோராக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரமாண்ட வளர்ச்சி இந்திய சிகை அலங்காரத் துறையின் புதிய மைல்கல் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.
இந்த வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள இவரது உழைப்பும், தன்னம்பிக்கையும்தான் இவருடைய வெற்றிக் கதையில் பெரும்பங்கைக் கொண்டுள்ளது. தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு மத்தியில் தோல்வியைக் கொண்டாட வேண்டும் என்று கூறும் தன்னம்பிக்கையாளராக இவர் விளங்குகிறார். தனித்து தொழில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் ராஹா ஹெர்பல் பவுடர் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற முனைப்புடன் இந்த நிறுவனத்தைச் செயல்படுத்தினார். முதல் ஆண்டிலேயே நிறுவனம் ஒரு கோடி ரூபாய் வர்த்தகத்தைத் தாண்டியது. மூன்றாவது ஆண்டிலேயே ஆறு கோடி ரூபாய் வருவாயை எட்டி தனது இலக்கை அடைந்தார்.
ஆனாலும் ராஹா தயாரிப்புகளை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவின. சில வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ராஹா நிறுவனம் முடிவுக்கு வந்தது. அவற்றையெல்லாம் கடந்து தனது மனைவியை ஊக்குவிக்கும் விதமாக நேச்சுரல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ராஹா நிறுவனத்திற்கு ஐந்து கோடி ரூபாய் இலக்கு வைத்த குமாரவேல் இம்முறை மாதம் ஒன்றுக்கு 60,000 ரூபாய் மட்டுமே இலக்கு நிர்ணயித்தார். தனது குடும்பத்துக்குத் தேவையான வருவாய் ஈட்டினால் மட்டும் போதும் என்றுதான் எண்ணினார்.
முதல் ஆண்டில் 20 லட்ச ரூபாய் தொழிலில் 10 லட்ச ரூபாய் இழப்பைச் சந்தித்தார். இரண்டாமாண்டில் 30 லட்ச ரூபாயில் தொழில் செய்தார். இழப்பு ஐந்து லட்சமாகக் குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சி மேலும் அதிகரித்து லாபகரமான தொழிலாக நேச்சுரல்ஸ் அமைந்தது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு குமாரவேலின் மனைவி முழுப் பங்களிப்பையும் செலுத்தியுள்ளார். வளர்ச்சியை விரிவுபடுத்தும் திட்டங்களை வகுத்து திறம்பட செயல்படுத்தினார் குமாரவேல்.
நேச்சுரல்ஸ் நிறுவனம் வழங்கிய சேவையும், சுகாதாரமும் வாடிக்கையாளர்களை நாளுக்கு நாள் அதிகமாக ஈர்த்தது. வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு விதமான முயற்சிகளையும் தொடர்ந்து இந்நிறுவனம் எடுத்தது. இதன் விளைவாக இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்த்தது. அனுபவம் இல்லாமல் சிறு முதலீட்டில் தொடங்கப்பட்டிருந்தாலும் தெளிவான திட்டமிடலும், அதைச் செயல்படுத்தும் வலிமையும் குமாரவேலிடம் இருந்தது. அதே சமயத்தில் நிறுவனத்தில் பெண்களுக்கே அனைத்து மட்டங்களிலும் முன்னுரிமை அளித்தார். முதல் கட்டமாக மூன்று கிளைகள் தொடங்க, அடுத்தடுத்த இலக்குகளுடன் கிளைகளின் எண்ணிக்கை ஆறானது. இன்று இந்தியா முழுவதும் உள்ள 80 நகரங்களில் 570 கிளைகளைப் பரப்பி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டுள்ளது. 7,500 பேர் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 10,000க்கும் அதிகமானோருக்கு இந்நிறுவனம் இதுவரையில் பயிற்சியளித்துள்ளது. 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இப்பிரிவில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக உருவாகியுள்ளது. விரைவில் வெளிநாடுகளிலும் தடம் பதிக்கத் தயாராகிக்கொண்டுள்ளது.
தொகுப்பு: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)
**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)
**சென்ற வார சண்டே சக்சஸ் ஸ்டோரி**: [ராதா – ரேன் இந்தியா](https://www.minnambalam.com/k/2018/05/20/20)
�,”