சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்போர் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளிலும், கவுரிவாக்கம் போன்ற புறநகர் பகுதிகளிலும் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதை எதிர்த்து இளையராஜா, நாகேஸ்வர ராவ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு நேற்று (ஜூலை 11) நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கெனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு நடத்திய வழக்கறிஞர் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், தினமும் 250 முதல் 300 லாரிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்துச்செல்லப்படுவதாகவும், விவசாயத்துக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி நிலத்தடி நீர் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஆய்வுக்காகச் சென்றபோது பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் நடராஜ் தன்னை மிரட்டியதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சட்டவிரோதமாகவும் வர்த்தகப் பயன்பாட்டுக்காகவும் நிலத்தடி நீர் எடுக்கப்படவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்த காவல் ஆய்வாளருக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். பழவந்தாங்கல் ஆய்வாளர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 378, 379இன் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி தாசில்தாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிவரித் துறை அதிகாரிக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் எச்சரித்தனர்.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பு தொடர்பாகப் பிறப்பிக்கப்படும் உத்தரவு மாநிலம் முழுவதும் பொருந்தும் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!](https://minnambalam.com/k/2019/07/11/76)**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**
�,”