2018இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டைச் சட்டவிரோதமாக கருதுவதாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும், பீட்டா அமைப்பை எதிர்த்தும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. தமிழகமே ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அவரச சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் அகரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2017 ல் வெளியிடப்பட்ட அரசாணையில் மேற்கண்ட பகுதிகள் இடம்பெறவில்லை என்று கூறினார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடாத ஊர்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்று வாதாடினர்.
இதை விசாரித்த நீதிமன்றம் 2018இல் ஜல்லிக்கட்டு விளையாட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? 2018இல் அரசாணை வெளியிடாமல் ஜல்லிக்கட்டு நடத்தியது தவறு இல்லையா? இது சட்ட விரோதம் என்று கூறி, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2018இல் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக, ஜனவரி 12 ஆம் தேதியே 84 இடங்களில் விளையாட்டை நடத்த அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் ஜனவரி 31க்கு மேல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கமுடியாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு தரப்புத் தெரிவித்துள்ளது.�,