காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், இம்முடிவும், மாநில ஆளுநரின் ஃபேக்ஸ் இயந்திரமும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்துவந்த ஆதரவைக் கடந்த ஜூன் 19ஆம் பாஜக திரும்பப் பெற்றதையடுத்து அங்கு நடைபெற்றுவந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதை தொடர்ந்து ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்தது.
மெகபூபாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியை உடைத்து சில எம்.எல்.ஏ.க்களை கொண்டுவந்து ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டிருந்த நிலையில், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு ஆட்சியமைக்க மெகபூபா முயன்றார். ஆனால், அம்மாநில சட்டப்பேரவையை கலைப்பதாக ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று இரவு அறிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம், எதிர் சித்தாந்தங்கள் உள்ள கட்சிகள் இணைவது மூலம் நிலையான ஆட்சியைத் தர முடியாது போன்றவற்றையும் ஆளுநர் காரணமாக கூறியுள்ளார்.
**ஃபேக்ஸ் இயந்திர சர்ச்சை**
ஆளுநரின் முடிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மெகபூபா முஃப்தி ஆட்சியமைக்க அனுமதி கோரி ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் மாளிகைக்கு ஃபேக்ஸ் செய்ய முயன்றபோது அதை பெறவேண்டிய ஆளுநரின் ஃபேக்ஸ் இயந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில், “ இன்றைய தொழில்நுட்ப காலத்தில், ஆளுநரின் இல்ல ஃபேக்ஸ் இயந்திரம் எங்களின் ஃபேக்ஸை பெறவில்லை என்பது விந்தையாக உள்ளது. ஆனால், அந்த ஃபேக்ஸ் இயந்திரம், சட்டசபை கலைக்கப்படும் அறிவிப்பை அனுப்பியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் மெகபூபா.
காஷ்மீர் ராஜ்பவனுக்கு புதிய ஃபேக்ஸ் இயந்திரம் தேவைப்படுகிறது என முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
**பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்**
ஆளுநரின் செயலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது, ஜம்மு, லடாக் ஆகிய பகுதிகளுக்கு அநீதி இழைத்துள்ள காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை சதித்திட்டத்தை தீட்டியுள்ளன என விமர்சித்துள்ள காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்து என்ன செய்வது என்பதை அதன் பின்னர் முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலோடு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
**எல்லைக்கு வெளியே இருந்து உத்தரவு**
பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் இது தொடர்பாக கூறுகையில், “எல்லைக்கு வெளியே இருந்து வந்த உத்தரவின் காரணமாக பிடிபி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்தன. தற்போது, இணைந்து ஆட்சியமைக்கும்படி புதிதாக அவர்களுக்கு உத்தரவு வந்துள்ளது” என்று விமர்சித்துள்ளார்.
ஃபேக்ஸ் இயந்திரம் ஏன் வேலை செய்யவில்லை என்பதுகுறித்து ஆளுநர்தான் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.�,