சட்டமன்றத் தேர்தல்தான் தன் இலக்கு என்றும் மே மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைப்பாட்டை அறிவிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை ரஜினிகாந்த் எடுத்துள்ளார். சட்டமன்றத் தேர்தல்தான் ரஜினி மக்கள் மன்றத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 17) அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வருகிற பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் எங்களது இலக்கு. நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறியுள்ளார்.
மேலும், “தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சியமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் ரஜினி அறிவுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எப்படியாவது ரஜினியைத் தனக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைப்பதற்கு பாஜக பகீரத பிரயத்தனங்களைச் செய்தது. ரஜினிக்குச் சில நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் தனது இரண்டாவது மகள் சௌந்தயர்யாவின் திருமண அழைப்பிதழ் அளிப்பதற்காகப் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்த ரஜினி, நடப்பு அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். இதன்பின் திருமணத்தை முடித்த ரஜினி, இப்போதுதான் அந்த ஆலோசனையின் விளைவாக இத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள் ரஜினி மன்ற வட்டாரத்தில்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தல்தான் நம் இலக்கு என்று அவர் தெரிவித்திருப்பது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.�,”