சட்டமன்றத்தில் கொரோனா பதற்றம்!- சபாநாயகர் முடிவின் பின்னணி!

Published On:

| By Balaji

கொரோனா தொற்று தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக பெரிய கடைகள், வர்த்தக வளாகங்கள் மூடப்படும், மக்கள் ஒன்று கூடல்களை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அதேபோல பிரதமர் மோடி மார்ச் 22 ஆம் தேதியை அனைவரும் வீட்டுக்குள் இருக்கும் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். மக்கள் அனாவசியமாக வெளியே வரவேண்டாம் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றம் மட்டும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. சட்டமன்றத்துக்குள் மிகக் குளிர்மையான ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று சட்டமன்றத்துக்குள் யாரையும் தாக்கிவிடப் போகிறது என்ற எச்சரிக்கையோடு சட்டமன்றத்தில் ஸ்டாலின், துரைமுருகன், ராமசாமி போன்றவர்கள் சட்டமன்றத்தை ஒத்திவைக்கலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பயப்பட வேண்டாம். தரமான சிகிச்சைகளை நாம் வழங்கிவருகிறோம்”என்று கிண்டலாக பதிலளித்தார்.

இந்நிலையில்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீண்டும் இன்று (மார்ச் 20) கேள்வி நேரம் முடிந்த பிறகு, ‘சட்டமன்றத்தை ஒத்தி வைக்க வேண்டும்’ என்று சிறப்பு கவன ஈர்ப்பு ஒன்றைக் கொண்டுவந்தார். “எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் இருக்க வேண்டிய இந்த நிலையில் சட்டமன்றத்தில் கூடியிருக்கலாமா?” என்று கேட்டார் ஸ்டாலின்.

இப்போது அரசுத் தரப்பின் அணுகுமுறை மாறியிருக்கிறது. சபாநாயகர், “இன்று மதியம் 1 மணிக்கு அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் முடிவு செய்வோம்”என்று கூறியிருக்கிறார். பெரும்பாலும் சட்டமன்றம் ஒத்திவைக்கப்படும் என்றே தெரிகிறது.

பொது இடங்களில் ஒன்று கூடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் தமிழக அரசின் முதல்வராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும், தங்கள் வீடுகளிலும் சட்டமன்றத்திலும் இந்த அறிவுரையைப் பின்பற்றியதாக தெரியவில்லை.

கடந்த சில நாட்களில் முதல்வர் இல்லமாகட்டும், அமைச்சர்கள் இல்லமாகட்டும். வழக்கம் போல எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் வந்துகொண்டுதான் இருந்தார்கள். கைகுலுக்கிக் கொண்டார்கள். சூட்கேஸ்களிலும், பேக்குகளிலும் வைரஸ்கள் இருக்கலாம் என்ற நிலையிலும் வழக்கமான ‘போக்கு’ ’வரத்து’ நடைபெற்றுக் கொண்டுதான் இருந்திருக்கிறது.

இது இப்படியென்றால் சட்டமன்றத்தில்?

“தமிழகத்துக்கும் பிற மாநிலங்களுக்குமான எல்லைப் பகுதிகளான திருவள்ளூர், குமரி, கோவை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து எல்லையோர எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருக்கும் அவர்களின் அறைகளுக்கு ஓசூர், குமரி, திருத்தணி, கோவை உள்ளிட்ட கர்நாடக, கேரள, ஆந்திர எல்லைப் பகுதிகளில் இருந்து கட்சியினர் வருகிறார்கள். அங்கே தங்கியிருந்தபடிதான் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு வருகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் சட்டமன்றத்துக்குள் ஊடுருவினாலும் ஆச்சரியம் இல்லை. இவ்வளவு சீரியசான விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று திமுகவின் மூத்த உறுப்பினர்கள் சிலர் முதல்வரிடமும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் தனிப்பட்ட முறையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எல்லையோர எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு கொரோனா தொற்றுக்கு வாய்ப்பில்லை என்று எப்படி சொல்ல முடியும் என்ற கேள்வி முதல்வரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த விஷயம் சபாநாயகரிடமும் கொண்டு செல்லப்பட்ட நிலையில்தான் இன்று மதியம் 1 மணிக்கு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தைக் கூட்டினார்” என்கிறார்கள் சட்டமன்ற வட்டாரங்களில்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share