தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது ஆத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமி, “திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை” என்று பேசினார். இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “திமுக ஆட்சி இறுதிக்கட்டத்தின்போது ஐந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நிதி ஆதாரம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில் நான்கு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. 810 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார்.
ஐ.பெரியசாமி தனது பேச்சின்போது, “மத்திய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்” என்றார். இதற்கு நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தொகை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பழைய ஊதியத் திட்டத்தையே செயல்படுத்தலாமா என்பதைப் பற்றி ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும். அவர்களின் ஆய்வறிக்கையின்படி முடிவு எடுக்கப்படும்” என்றார். முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவது அதிமுக ஆட்சியில் குறைந்து விட்டதாக ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயகுமார், “திமுக ஆட்சியில் முதியோர் உதவித் தொகை ஒதுக்கீடு ரூ.1,200 கோடியாக இருந்தது. அதிமுக ஆட்சியில் அது ரூ.4,200 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் உதவித் தொகைக்காக மக்கள் அலையாமல் திட்டங்கள் அவர்களின் வீடுதேடி செல்கின்றன” என்றார்.
தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்கு செலவிடப்படும் தொகை குறித்து ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், “மீத்தேன் திட்டத்துக்கு திமுக ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது” என்றார். இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், “திமுக ஆட்சியில் மீத்தேன் திட்டத்துக்கான ஆய்வுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டது” என்றார். அதை மறுத்து பேசிய அமைச்சர் தங்கமணி, “ஆய்வுக்காகத்தான் அனுமதி வழங்கப்பட்டது என்றால், எதற்காக அரசாணை வெளியிட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுக உறுப்பினர் தங்கராஜ் பேசும்போது, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர எத்தனை நாட்களாகும்? ஆளுநர் உரையில் அங்கீகாரம் இல்லாத பார்களை மூடுவது குறித்த அறிவிப்பு இல்லை” என்றார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பார்களே இல்லை” என்றார்.�,