தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ( நவம்பர் 1) அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்யலாமா என்று ஆலோசனை நடைபெறுகிறது.
மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தக் கூட்டத்துக்கு திட்டக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக உள்ள மக்களவை எம்.பி. தலைமை வகிப்பார். அம்மாவட்டத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவரும் கலந்துகொள்ளலாம்.
இன்று காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்று முடிவாகியிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றி காரசாரமாகக் கேள்வி கேட்கலாம் என்று சசிகலா புஷ்பா எம்.பி.யும் தூத்துக்குடி வந்தார். ஆனால் இன்று காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ.விடம் இருந்து, “இன்று நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்று நிருபர்களுக்கு மெசேஜ் வந்தது. ஏன் என்று தொடர்பு கொண்டு கேட்டதற்கு எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பதில் வந்தது.
இதற்கிடையே இன்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துவிட்டார் மாநிலங்களவை எம்.பி.யான சசிகலா புஷ்பா. அவரது கணவர் மற்றும் அமமுக நிர்வாகிகளும் உடன் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் வந்தவருக்கு, “இன்று கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது” என்று ஊழியர்கள் தகவல் தெரிவித்ததும் சசிகலா புஷ்பா கோபமாகிவிட்டார்.
“நான் இந்தக் கூட்டத்துல கலந்துக்குறதுக்காகவே புறப்பட்டு வந்தேன். கேன்சல் பண்ணியாச்சுனு என்கிட்ட ஏன் சொல்லவே இல்லை?” என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினார் சசிகலா புஷ்பா. ஆனால் ஊழியர்கள், “இது எங்களுக்குத் தெரியாது. எங்ககிட்ட கேக்காதீங்க” என்று சொன்னதும் கலெக்டர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து தங்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக சொல்லி வருவாய் துறை ஊழியர்களும் ஆர்பாட்டம் செய்தனர். போலீசார் வந்து சசிகலா புஷ்பாவை வெளியேற செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் அலுவலக காம்பவுன்ட் டுக்கு வெளியே வந்து பேட்டியளித்த சசிகலா புஷ்பா,
“மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய கண் காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கடந்த 12ஆம் தேதி எனக்கு கடிதம் வந்தது. ஆனால் இங்கு வந்தபிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்கள். இந்த தகவல் எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
தூத்துக்குடியில் வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுவேன் என்பதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து ஒரு பெண் என்றும் பாராமல் என்னை மிரட்டுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
சசிகலா புஷ்பா மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஊழியர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தூத்துக்குடி போலீஸார் வட்டாரத்தில் சொல்கிறார்கள். இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தில் இன்று ஆலோசனை நடந்திருக்கிறது என்கிறார்கள் கலெக்டர் அலுவலகத்தில்.�,