சசிகலா சிறையிலிருந்து வெளியே சென்றார்? வீடியோ ஆதாரம்!

public

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, இளவரசி இருவரும் சிறை காவலர்கள் முன்னிலையிலேயே சிறையிலிருந்து வெளியே போய்வந்த வீடியோ காட்சி ஆதாரத்தை கர்நாடகாவின் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணை கமிஷன் முன்பு சமர்ப்பித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், உச்ச நீதிமன்றம் பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது. ஜெயலலிதா காலமானதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலா, அவருடைய உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் கர்நாடகா சிறைத்துறை டிஐஜி ரூபா பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பிறகு, சிறையில் தண்டனைக் கைதிகளாக உள்ள சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்கள் தண்டனைக் கைதியைப் போலில்லாமல் அவர்களுக்கு என்று தனி அறை, சமையல் அறை, அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களைச் சந்திக்க தனி அறை என்று சிறை அதிகாரிகள் செய்துகொடுத்துள்ளனர். இதை கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்துள்ளார் என்று ரூபா ஊடகங்களில் குற்றம் சாட்டினார். சிறையில் சசிகலா கைதியைப் போல் இல்லாமல் தனது பண பலத்தால் சிறையில் சலுகைகளைப் பெற்றுள்ளார் என்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பரப்பன அக்ரஹார சிறையில் நடந்த விதிமீறல்களை டிஐஜி ரூபா அரசுக்கு முறையாக புகார் அளிக்காமல் ஊடகங்களில் தெரிவித்ததால் சர்ச்சையானது. இதையடுத்து, டிஐஜி ரூபா போக்குவரத்து பாதுகாப்பு துறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறைத் துறை டிஜிபி சத்யநாராயண ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா சிறையில் விதிகளை மீறி லஞ்சம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிட்டார். இதனிடையே சத்யநாராண ராவ் பணி ஓய்வு பெற்றார்.

சசிகலா சிறையில் லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகளை அனுபவித்து வந்தார் என்று குற்றம் சாட்டிய டிஐஜி ரூபா சாட்சியம் அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு பிரிவு மற்றும் விசாரணை கமிஷன் அவருக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, ரூபா கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) விசாரணைக் கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியமளித்தார். அப்போது, சசிகலா, இளவரசி இருவரும் சிறையிலிருந்து வெளியே சென்று வரும் வீடியோ காட்சியை சமர்ப்பித்தார். அந்த காட்சியை [‘தி ஹிந்து’ வெளியிட்டுள்ளது](http://www.thehindu.com/news/cities/bangalore/sasikala-cctv-footage-in-bengaluru-prison/article19532988.ece). அந்த வீடியோவில் சசிகலா, இளவரசி இருவரும் சிறை காவலர்கள் முன்பு சிறையின் முக்கிய நுழைவாயில் வழியாக சிறைக்கு வெளியே சென்றுவருவது பதிவாகியுள்ளது. மேலும், ரூபா தனது சாட்சியத்தை 12 பக்கம் அளவில் எழுத்துப் பூர்வமாகவும் அளித்துள்ளார். அதில், சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெண்கள் சிறையில் இருக்கின்றனர். சிறை விதிகளை மீறி ஆண் காவலர்கள் பெண்கள் சிறையில் நுழைந்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்த விசாரணை கமிஷனின் தலைவர் வினய் குமார், முழு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய கர்நாடக அரசிடம் மேலும் கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளார்.

காவல் துறை அதிகாரி ரூபா சசிகலா சிறை விதிகளை மீறி சிறை காவலர்கள் ஒத்துழைப்புடன் சிறையிலிருந்து வெளியே சென்று வந்ததற்கான வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளதால் சசிகலாவுக்கு மேலும் தண்டனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

இது குறித்து, கர்நாடகா மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி இன்று (ஆகஸ்ட் 20) செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகுபலி பட கிராபிக்ஸ் போல இந்த வீடியோ காட்சிகளை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளனர். இது உண்மையான வீடியோ கிடையாது. வேண்டும் என்றே திட்டமிட்டு யாரோ இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு உள்ளனர். சசிகலா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தி ஹிந்து�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0