மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத் நினைவாக ‘சங்கராபரணம் விருதுகள்’ என்ற பெயரில் திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளதாக நடிகை துளசி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 19) இந்த விருதுகள் பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியல் வெளியானது. அதில் அமீர்கான், தனுஷ், அலியா பட், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் (ஜூன் 14) துளசி IANS-க்கு அளித்த பேட்டியில், ‘எனது குரு இயக்குநர் கே.விஸ்வநாத் பெயரில் விருது வழங்க முடிவு செய்தேன். அவர் இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியவர். அவர் பெயரில் விருது வழங்க முடிவு செய்தோம். இதற்கு ’சங்கராபரணம் விருது’ என்ற பெயரை சூட்டியுள்ளோம். கே.விஸ்வநாத் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம், ‘சங்கராபரணம்’. அதனால் அந்த பெயரை சூட்டியுள்ளோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி துறையினருக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.’ என்று தெரிவித்திருந்தார்.
துளசி சங்கராபரணம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மற்ற திரைவிருதுகள் நிகழ்ச்சிகளில் திரைக்கலைஞர்களின் நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த விழாவில் மாற்று திறனாளிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுவதாக துளசி தெரிவித்துள்ளார். மேலும் அவர், குறுகிய காலத்தில் இந்த விருதுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ததால் இந்த ஆண்டுக்கான விருது நான்கு பிரிவுகளில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த வருடம், ’தங்கல்’ இந்திப் படத்துக்காக அமிர் கான், ’உட்தா பஞ்சாப்’ படத்துக்காக அலியா பட், ’ப.பாண்டி’ படத்தை சிறப்பாக இயக்கியதற்காக தனுஷ், ’ஜனதா காரேஜ்’ என்ற தெலுங்கு படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டிலிருந்து இது மேலும் விரிவடையும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இவ்விழா துளசியின் பிறந்தநாளான ஜூன் 20ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று ஹைதராபத்தில் நடைபெறுகிறது.�,