மனிதத்தை மீட்டெடுக்கக்கூடிய நாடகக் கலை – நரேஷ்
“கல் போன்ற மனிதர்களைக்கூட நாடகத்தின் மூலம் கரைய வைத்துவிட முடியும். பிறரைப் பற்றிய பச்சாதாபத்தை (Empathy) உண்டுபண்ணக்கூடிய ஒரே கலை நாடகம்தான். இந்த அன்பைவிடவா பெரிய ஆயுதம் சமூகத்திற்குத் தேவை?”
– குரு சோமசுந்தரம், நடிகர்.
நாடகம் என்ற கலையைக் கடவுளுக்கு இணையானதாக அவர்கள் கருதிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கலையை நிகழ்த்துவதற்காக வந்திருந்தவர்கள் தயாரான விதமும், அந்த மேடைக்கு அவர்கள் கொடுத்த மரியாதையும் வியக்கச்செய்தன. நாடகங்களில் நடிகர்களாகப் பங்கேற்றவர்கள்தான் மேடைத் தயாரிப்புக்கான அத்தனை வேலைகளையும் செய்தார்கள். உதவியாளர்கள் என்று யாரும் இல்லாமல், தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொண்டனர்.
இன்னொரு ஆச்சரியமான விஷயம், நாடகம் முடிந்த பிறகு, நாடகம் நடந்த மேடையைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டுத்தான் நடிகர்கள் அங்கிருந்து செல்கிறார்கள். நடிக்க வந்தவர்களிடம் அநியாயத்திற்கு அப்படியொரு தன்னடக்கம். வெளியில் பார்ப்பதற்கும் நாடக மேடையில் அவர்களை பார்ப்பதற்கும் அப்படியொரு வேறுபாடு.
“தொழில்நுட்பம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், நேரடி நிகழ்த்துக் கலையாக இருக்கும் நாடகத்திற்கு என்ன தேவை இருக்கிறது?” என்ற கேள்வியை அக்கலைஞர்களிடம் தூண்டிலாகப் போட்டோம்.
“தமிழகத்துல நாடகங்கள்தாங்க நாட்டையே ஆள்வதற்கான புரட்சியை உண்டுபண்ணியது…” என்றார் விளிம்பு கலைக் குழுவின் தலைவர் சுப்பையா. “திராவிடக் கட்சிகள்தான் நாடகத்தை மிகப்பெரும் அளவில் கொண்டுவந்தாங்க. தங்கள் கருத்தியலையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டுசேர்க்குறதுக்கு நாடகத்தை மிகப் பெரிய கருவியாகவும் ஆயுதமாகவும் கையிலெடுத்தது திராவிடக் கட்சிகள்தான். இதுல மறக்க முடியாத இரண்டு ஆளுமைகள் சி.என்.அண்ணாதுரையும் கலைஞர் மு.கருணாநிதியும். அவர்களுடைய நாடகங்கள் மக்கள் மத்தியில மிகப் பெரிய எழுச்சியை உண்டுபண்ணின. எத்தனையோ பேர் அவர்களுடைய நாடகங்களைப் பாத்துதான் நடிக்கவந்தேன்னு சொல்லிருக்காங்க. நாடகம் என்பது இன்றுவரை தழைத்தோங்கியிருக்கிறதுன்னா அதுக்குக் காரணம் இந்த இரண்டு கலை ஆளுமைகள்தான்.”
**அரசியல் சரி, சமூகத்திற்கு நாடகம் செய்தது என்ன?**
இதற்கு மிக எளிமையாக பதிலளித்தார் நடிகர் குரு சோமசுந்தரம். “சமூகத்தால் சமைக்கப்பட்ட குடும்ப அமைப்பு, உறவுகள் அதனடிப்படையிலான இனக்குழுனு இருக்கும்போது அவற்றை விமர்சிக்கவும் ருசிக்கவும் நாடகம் எனும் கலைதான் துணைபுரியுது. அதைப் பார்க்கும் மக்கள் ரொம்ப எளிதாகத் தங்களோட தவறுகளைப் புரிஞ்சிக்குவாங்க. நீங்க வெறுமனே ஒரு சொற்பொழிவாகவோ, கேள்விக்கான பதிலாகவோ சொல்வதைவிட ஒரு நாடகமா நிகழ்த்திக் காட்டும்போது, பார்ப்பவர்களின் மனதில் மிகப் பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் உண்டுபண்ணும்.”
ஒரு சிறிய இடைவெளி விட்டவர், தனிப்பட்ட முறையில் நாடகம் தனக்குள் நிகழ்த்திய மாற்றத்தைப் பற்றியும், மனித மனதுக்கும் கலைக்கு உள்ள உறவு குறித்தும் தொடர்ந்தார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்னு வள்ளலார் பாடினார் இல்லையா? அதுதான் பச்சாதாபம் (Empathy). அந்த அன்புணர்வை மக்கள் மனதில் மிக எளிதாகப் புகுத்தக்கூடியவை நாடகங்கள். தியேட்டர்ல படம் பாக்கும்போதே அவ்வளவு உணர்ச்சிகளை உள்வாங்க முடியும்போது, நாடகங்களில் நேரடியாக அதை நிகழ்த்திக்காட்டும்போது கல் மனசா இருந்தாக்கூட கரைஞ்சு அழுதிடுவாங்க. அந்த நாடகத்துல நடிகர் கோவமா இருந்தா அதை நாம உணர்வோம், வருத்தப்பட்டா நாமும் வருத்தப்படுவோம், சிரிச்சா சிரிப்போம். சக மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கி வெளிப்படுத்தக்கூடிய மிகப் பெரிய வல்லமையை வழங்குபவை நாடகங்கள். இது தொடர்ந்து கடத்தப்படாததன் காரணம்தான் இன்னைக்கு மனிதர்கள், சக மனிதர்களின் கவலைகளை, தேவைகளை புரிஞ்சிக்காம தங்களோட வாழ்க்கையை மட்டும் முன்னெடுத்து சுயநலமா வாழுறாங்க.”
இன்று எத்தனை பேரால் சக மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்க முடிகிறது? கணவனால் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடிகிறதா? பெற்றோர்களால் பிள்ளைகளின் தேவைகளைப் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்த வறண்ட உணர்வு வெளியில் உழலும் மனிதக் கூட்டத்தில் எவ்வளவு வன்முறைகள் சத்தமில்லாமல் நிகழ்கின்றன என்பதை நாம் பார்த்துவருகிறோம். உயிர்களின் உணர்வையும், மனித மனத்தையும் புரியவைப்பதுதான் கலைகளின் தலையாய கடமை. தொழில்நுட்பத்தாலும் கருவிகளாலும் அவற்றை ஒருபோதும் சாத்தியப்படுத்த முடியாது. இந்தக் கலைகளை மீட்டெடுக்கவில்லை என்றால், மனிதத்தை மீட்டெடுக்க முடியாது.
‘கறுப்பு’ என்ற நாடகத்தில் நடித்த பெண் நாடகக் கலைஞர், “சாதி என்றொரு அமைப்பு இருப்பதும், அதில் இவ்வளவு கொடுமைகள் இருப்பதும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் முழுமையாக உணர முடிந்தது” என்று கூறினார். சமூகப் பிரச்சினைகளையும் சமூக உணர்வையும் ஆழமாகப் புரிந்துகொள்ள வைப்பதுதான் கலைகளின் நோக்கம். அதைக் குழந்தைகளிடத்தில் எடுத்துச் செல்லவில்லை என்றால், நம்மால் மீட்சிகொள்ள முடியாது. நாடகம் எனும் கலையில் பெண்களின் பங்கு குறித்தும், பெண் விடுதலையில் நாடகங்கள் எவ்வளவு பெரிய இடம் வகிக்கின்றன என்பது பற்றியும் பேச நிறைய இருக்கின்றன.
கூடவே, நாடகங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் செயல் திட்டம் ஒன்றும் இந்த நாடக விழாவின் மூலமாக விதைக்கப்பட்டது. மிக எளிதாக சாத்தியப்படுத்தக்கூடிய, அதே நேரம் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய அந்தச் செயல் திட்டம் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.
(நாடகங்களுடனான பயணம் தொடரும்…)
[பகுதி 1](https://www.minnambalam.com/k/2019/04/07/13)
�,”