நிர்வாக வசதிக்காக கோவை மாநகர் மாவட்ட திமுகவை இரண்டாக பிரித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதுகுறித்த அதிருப்தியை ஜனவரி 21ஆம் தேதி நடந்த தலைமை செயற்குழு அவசரக் கூட்டத்திலேயே வெளிப்படுத்திய ஸ்டாலின், கட்சியைக் காக்க அறுவைச் சிகிச்சை செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி, முதல் அதிரடி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று அரங்கேறியது.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதுபோலவே முன்னாள் மத்திய அமைச்சர் காந்தி செல்வனும் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது அடுத்த அதிரடியை கோவையில் நடத்தியுள்ளார் ஸ்டாலின். கோவை தெற்கு, வடக்கு, மாநகர் என நிர்வாக ரீதியாக மூன்று மாவட்டங்களாக செயல்பட்டுவந்த நிலையில், தற்போது அது நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று ( பிப்ரவரி 4) வெளியிட்ட அறிவிப்பில், “57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் தற்போதைய கோவை மாநகர் மாவட்டத்தில் மேலும் 14 வார்டுகள் புதியதாக சேர்க்கப்பட்டு 71 வார்டுகள் கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்டம்” அமையும்.
கோவை தெற்கு தொகுதியிலுள்ள 19 வார்டுகள், சிங்காநல்லூர் தொகுதியில் 19 வார்டு, கோவை வடக்கு தொகுதியில் 19 வார்டுகள், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகம் 7 வார்டுகள், குனியமுத்தூர் பகுதி கழகத்தில் 7 வார்டுகள் என மொத்தமுள்ள 71 வார்டுகள் கொண்டதாக புதிய “கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் ” அமைவதோடு, அதன் பொறுப்பாளராக நா.கார்த்திக், எம்.எல்.ஏ தொடர்ந்து செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்
அதுபோலவே, புதியதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக மு.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள 11 வார்டுகள், சரவணம்பட்டி பகுதியிலுள்ள 11 வார்டுகள், குறிச்சி பகுதியிலுள்ள 7 வார்டுகள் ஆகிய 29 வார்டுகள் கோவை மாநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளது.
கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக சி.இராமச்சந்திரனும், தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் தொடர்ந்து செயல்படுவார் என்றும் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் தொகுதி, மேட்டுபாளையம் நகரம், காரமடை கிழக்கு, காரமடை மேற்கு, கவுண்டம்பாளையம் தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆகிய பகுதிகள் கோவை வடக்கு மாவட்டத்தை உள்ளடக்கியதாக உள்ளது.
வால்பாறை சட்டமன்ற தொகுதி, வால்பாறை நகரம், ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம், கிணத்துக்கடவு மேற்கு (பாதி), கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி. மதுக்கரை ஒன்றியம், சூலூர் சட்டமன்ற தொகுதி, சூலூர் வடக்கு ஒன்றியம், சூலூர் தெற்கு ஒன்றியம், சுல்தான் பேட்டை ஒன்றியம் ஆகியவை கோவை தெற்கு மாவட்டத்திற்குள் அடங்கும்.
கோவையைத் தொடர்ந்து இன்னும் பல மாவட்ட திமுக நிர்வாகிகள் மாற்றம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
�,”