0
கோவை துடியலூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என கோவை மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையைச் சேர்ந்த 6 வயது சிறுமி காணாமல் போனார். மார்ச் 26ஆம் தேதி காலையில், அவரது வீட்டிற்கு அருகேயுள்ள சந்து பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார். இது குறித்து விசாரணை நடத்த எஸ்.பி. பாண்டியன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் மீது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த நால்வரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 28) சிறுமி கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க 9443122744, 9498174226, 9498174227 என்ற தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நோட்டீஸ் அச்சடித்துள்ள காவல் துறை, அதை அந்தப் பகுதிகளில் ஒட்டி வருகிறது. மக்களிடமும் விநியோகம் செய்து வருகிறது.
சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பே பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
�,”