குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 41
**இராமானுஜம்**
திட்டமிடல், தொலைநோக்குப் பார்வையின்றி தொடங்கிய திரைப்படத் துறையினர் வேலைநிறுத்தம் எந்தத் திட்டமும் நிறைவேறாமல் முடிந்துவிடும் போல தெரிகிறது. சென்னையில் நடைபெற்ற திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதைத்தான் எதிரொலிக்கிறது.
வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழ் சினிமா சுத்திகரிக்கப்படும் எனத் தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? நமக்குத் தேவையானது யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் பேசி வாங்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து வீர வசனம், வீண் பேச்சுகள் பேசி கடந்த ஒரு மாதத்தைக் கழித்துவிட்டனர். இதை முன்னிறுத்தியே நேற்று மாலை நடைபெற்ற தியேட்டர் உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் அனல் பறந்தது.
அனைவருக்கும் பொறுமையாக நிர்வாகிகள் பதில் கூறியிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானவை.
1. இனிவரும் காலத்தில் எந்தத் திரைப்படத்துக்கும் எம்.ஜி. (மினிமம் கேரண்டி) கொடுக்க மாட்டோம்.
2. படங்கள் திரையிடுவதில் 50 – 50 சதவிகித அடிப்படையில் பங்கு தொகை வழங்கப்படும்.
3. வெளிநாட்டு உரிமை வாங்கியவர்கள் படம் வெளியாகி மூன்று மாதங்கள் கழித்தே ரிலீஸ் செய்ய வேண்டும்
4. அமேசான் போன்றவற்றுக்குப் படங்களை 365 நாள்கள் கழித்தே வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இக்கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் வழக்கம்போல தயாரிப்பாளர்கள் சங்கப் பெயரில் யாருடைய பெயரும் இன்றி ஓர் அறிவிப்பு வெளியானது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்க உரிமையாளர்களையும், நேரடியாகச் சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக நாளை (அதாவது இன்று – வியாழன் – 12/04/18) மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நடக்கவிருக்கும் இந்த முக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்களான சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இப்படிக்கு
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
இந்த அறிவிப்பு தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘எதுவாக இருந்தாலும் எங்கள் அமைப்பு நிர்வாகிகளுடன் பேச வேண்டும். கடந்த 40 நாள்களாக எங்கள் பிழைப்பைக் கெடுத்துவிட்டு, தியேட்டர் நடத்துபவர்கள் அனைவரையும் திருடர்கள் போல் சித்திரித்துவிட்டு இப்போது சகோதரர்களை அழைக்கிறோம் எனக் கூப்பிட என்ன துணிச்சல்’ எனக் கொந்தளிக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். ‘எங்களை அழைத்துக் கூட்டம் போட இவர்கள் யார்? சங்கத்தை உடைக்கவும், சீர்குலைக்கவும் நடத்தப்படும் தாக்குதல் இது. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட விஷால் ஊர் ஊராகப் போய் ஓட்டு கேட்டார். எங்களை சந்தித்துப் பேச வேண்டும் என எண்ணியிருந்தால் தியேட்டருக்குத் தேடி வந்திருக்க வேண்டும். அதை விடுத்து தமிழகத்தில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்களைக் கலந்துரையாட அழைப்பது கயமைத்தனம்’ என்கிறார் ஒரு தியேட்டர் உரிமையாளர்.
தமிழகத்தில் இன்று செயல்பாட்டில் உள்ள தனித் திரையரங்குகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு குடும்ப வரலாறு, ஊர் வரலாறு உண்டு. தன் ஊர்க்காரன் படம் பார்க்க வெளியூர் செல்லக் கூடாது என்பதற்காக அந்த ஊர் பண்ணையார் அல்லது பெரும் பணக்காரர்கள் பொதுநல நோக்கோடு கட்டிய திரையரங்குகள் இன்றளவும் கம்பீரமாக ஊர்களின் அடையாளச் சின்னமாக திகழ்கின்றன. இதுபோன்ற திரையரங்குகள் லாப நோக்கத்தை முன்வைத்து நடத்தப்பட்டதில்லை.
சினிமாவில் எல்லாம் மாறும். சிவாஜி – எம்ஜிஆர் அடுத்து கமல் – ரஜினி; அடுத்து விஐய் – அஜித் எனக் கால மாற்றத்துக்கு ஏற்ப கதாநாயக பிம்பங்கள் மாறியிருக்கலாம். நிரந்தரம் என நினைத்த பாரம்பரியம் மிக்க ஏவி.எம் ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ, விஜயா ஸ்டுடியோ, கற்பகம் ஸ்டுடியோ இன்று இல்லை. ஆனால், தனித் திரையரங்குகள் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றளவும் செயல்பட்டு வருவது பெருமைக்காக. அப்படிப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களை உப்புமா பட தயாரிப்பாளர்களும், உருப்படாத படம் இயக்கிய இயக்குநர்களும் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக எந்தளவு திருட்டு குற்றம் சுமத்த முடியுமோ அந்தளவு தரக்குறைவாக தினம்தோறும் பேசினார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் தமிழகம் முழுவதும் திரையரங்கு உரிமையாளர்களைக் கோபப்பட வைத்திருக்கிறது.
கடந்த இரு வாரங்களாக தனித்திரையரங்க உரிமையாளர்களை ஒருங்கிணைத்து புதிய அமைப்பை உருவாக்கத் தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவே முடங்கியிருந்தபோது தலைவர் விஷால், அவர் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அடம்பிடிக்கும் விஷால் எப்படி இந்த விலைக்கு விற்கலாம் என்கின்றனர். எந்த வரியும் அமலில் இல்லாத காலத்தில்கூட விஷால் நடித்த படம் ரூ.10 கோடியை வருவாயாக வசூல் செய்தது இல்லை. ஒரு நடிகனின் படத்துக்கு உண்மையான வசூல் என்ன என்பதைப் பகிரங்கப்படுத்தவே டிக்கெட் விற்பனை கணினி மயமாக்கப்பட வேண்டும் எனக் கூறிவரும் விஷால், தனது படத்தை முன் உதாரணமாகப் பயன்படுத்தவில்லை என்கின்றனர். குறிப்பிட்ட பெரும் பட முதலாளிகளுக்கு மட்டுமே இந்த வேலைநிறுத்தத்தால் பலன் கிட்டும். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பயனும் நிகழப் போவதில்லை என்கிறார் ஒரு திரையரங்க உரிமையாளர்.
டிஜிட்டல் நிறுவனங்களைப் பயமுறுத்தவும், நெருக்கடி கொடுக்கவும் புது ஒப்பந்தங்களில் சில நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் கையெழுத்திட்டது போல திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுக்குள் பிளவுகளை உண்டாக்கவே தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று மாலை தி.நகர் ஆந்திரா கிளப்புக்கு திரையரங்க உரிமையாளர்களை அழைத்திருக்கும் நோக்கம் என்கின்றனர்.
குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.
மின்னஞ்சல் முகவரி: entertainment@minnambalam.com
[பகுதி 1](https://www.minnambalam.com/k/2018/02/23/66) [பகுதி 2](http://minnambalam.com/k/2018/02/24/59) [பகுதி 3](https://minnambalam.com/k/2018/02/26/48) [பகுதி 4](https://minnambalam.com/k/2018/02/27/53) [பகுதி 5](https://www.minnambalam.com/k/2018/02/28/70) [பகுதி 6](https://minnambalam.com/k/2018/03/02/56) [பகுதி 7](http://minnambalam.com/k/2018/03/05/10) [பகுதி 8](https://minnambalam.com/k/2018/03/06/15) [பகுதி 9](https://minnambalam.com/k/2018/03/07/13) [பகுதி 10](https://minnambalam.com/k/2018/03/08/15) [பகுதி 11](https://www.minnambalam.com/k/2018/03/09/35) [பகுதி 12](http://minnambalam.com/k/2018/03/10/6) [பகுதி 13](http://www.minnambalam.com/k/2018/03/11/13) [பகுதி 14](http://minnambalam.com/k/2018/03/12/26) [பகுதி 15](http://www.minnambalam.com/k/2018/03/13/34) [பகுதி 16](http://www.minnambalam.com/k/2018/03/14/29) [பகுதி 17](http://minnambalam.com/k/2018/03/15/35) [பகுதி 18](http://minnambalam.com/k/2018/03/16/33) [பகுதி 19](http://minnambalam.com/k/2018/03/17/32) [பகுதி 20](http://minnambalam.com/k/2018/03/19/23) [பகுதி 21](http://minnambalam.com/k/2018/03/20/25) [பகுதி 22](http://minnambalam.com/k/2018/03/21/27) [பகுதி 23](http://www.minnambalam.com/k/2018/03/22/38) [பகுதி 24](http://minnambalam.com/k/2018/03/23/36) [பகுதி 25](http://minnambalam.com/k/2018/03/24/27) [பகுதி 26](https://minnambalam.com/k/2018/03/25/26) [பகுதி 27](http://minnambalam.com/k/2018/03/26/27) [பகுதி 28](http://www.minnambalam.com/k/2018/03/27/31) [பகுதி 29](http://minnambalam.com/k/2018/03/28/26) [பகுதி 30](http://minnambalam.com/k/2018/03/29/66) [பகுதி 31](http://minnambalam.com/k/2018/03/30/61) [பகுதி 32](http://minnambalam.com/k/2018/03/30/86) [பகுதி 33](http://minnambalam.com/k/2018/04/02/26) [பகுதி 34](http://minnambalam.com/k/2018/04/02/26) [பகுதி 35](http://minnambalam.com/k/2018/04/04/25) [பகுதி 36](http://minnambalam.com/k/2018/04/05/26) [பகுதி 37](http://minnambalam.com/k/2018/04/06/25) [பகுதி 38](http://minnambalam.com/k/2018/04/07/28) [பகுதி 39](http://minnambalam.com/k/2018/04/11/63) [பகுதி 40](http://minnambalam.com/k/2018/04/11/63)
�,”