அதிமுக-வின் இரு அணிகளும் இணைவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தால், எங்கள் கோரிக்கைகளை ஏற்பதில் தயக்கம் காட்டுவது ஏன்? என்று மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.
மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் மூத்த நிர்வாகியுமான செம்மலை இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலைமலர் செய்தியாளரிடம் பேசுகையில் கூறியதாவது, மக்கள் பிரச்னையில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ஆம் தேதி புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆனால், வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்கான அணி வகுப்பு அலங்கார ஊர்தி வேலைப்பாடுகள், மாணவ, மாணவிகள் பயிற்சி உள்படச் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் சேப்பாக்கம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
அதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் போராட்டத்தை வேறு தேதியில் வைத்துக் கொள்வோம் என்று எங்கள் அணித் தலைவர் ஒ.பன்னீர் செல்வத்திடம் தெரிவித்தோம். அவரும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை வருகிற 18-ஆம் தேதி நடத்திக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதற்கான முயற்சியாகத் தெரிகிறது. ஆட்சி, கட்சியின் நலன் கருதி அதை வெளிப்படையாக அறிவித்தால் பொதுமக்களின் ஆதரவும் கிடைக்குமே. சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்குவது மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை எடப்பாடி அணியினர் ஏற்றுக்கொள்ளத் தயாரானால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
அரசுக்கு நெருக்கடி கொடுக்கவோ, அரசைக் கவிழ்ப்பதோ எங்கள் நோக்கமல்ல, நாங்கள் அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்துகிறோம் என்று அவர் கூறினார்.�,